அமீரகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் கார்கள் மழைநீரால் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளால் வாகனங்கள் சேதமடைந்த குடியிருப்பாளர்கள், இனி ‘To Whom It May Concern’ சான்றிதழைப் பெற தங்கள் கார்களை காவல் நிலையத்திற்குக் கொண்டு வர வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, சேதமடைந்த வாகனத்தின் புகைப்படத்தை அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழுக்கான விண்ணப்பம் நீண்ட காலமாக துபாய் காவல்துறை செயலி மற்றும் வலைத்தளத்தில் கிடைக்கிறது, ஆனால் சேதத்திற்கான காரணத்தை சரிபார்க்க வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு ஆய்வுக்காக கொண்டு வர வேண்டி இருந்தது.
இந்நிலையில் துபாய் காவல்துறையின் நிர்வாக விவகாரங்களுக்கான பொதுத் துறையின் இயக்குனர் பிரிகேடியர் மன்சூர் அல் கர்கௌய் இனி விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம் என்று அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் “சேவை தானியங்கிமயமாக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் இனி தங்கள் வாகனங்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டியதில்லை. அவர்கள் துபாய் காவல்துறை வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும், சான்றிதழ் தொகுப்பு சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டும், இயற்கை பேரிடருக்கான ‘To Whom It May Concern’ சேவையைத் தேர்வு செய்ய வேண்டும், சேதமடைந்த வாகனத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும், மேலும் ஒன்று முதல் இரண்டு வணிக நாட்களுக்குள், 95 திர்ஹம் கட்டணத்தில் மின்னணு முறையில் சான்றிதழைப் பெறுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
அதே போல் அபுதாபியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மழையினால் தங்கள் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டால் அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ராவில் உள்ள காவல் போக்குவரத்துத் துறைகளுக்குச் சென்று புகாரளித்து சான்றிதழ்களைப் பெறலாம்.
ஷார்ஜாவில் வாகன சேதமடைந்த சான்றிதழை பின்வரும் லிங்கில் சென்று பெற்றுக்கொள்ளாம்.(https://www.shjpolice.gov.ae/EServices/ToWhomitMayConcernCommon)
