அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை மொத்தம் 94 பேர் ஈரான் தாக்குதலால் காயமடைந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரக வான் பாதுகாப்புப் படையினர் இன்று, (மார்ச் 5, 2026) மட்டும் 6 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 125 ட்ரோன்களையும் இடைமறித்துள்ளனர் என தகவல் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில் இன்று (வியாழக்கிழமை), கூடுதலாக, 131 ட்ரோன்கள் கண்டறியப்பட்டதாகவும்; 125 இடைமறிக்கப்பட்டதாகவும், 6 நாட்டிற்குள் விழுந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே போல் ஈரானிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து, மொத்தம் 196 பாலிஸ்டிக் ஏவுகணைகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவற்றில் 181 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டன, அவற்றில் 13 கடலில் விழுந்தன, மேலும் 2 ஏவுகணைகள் நாட்டின் எல்லையில் விழுந்தன என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், 1,072 ஈரானிய ட்ரோன்கள் கண்டறியப்பட்டன என்றும், அவற்றில் 1001 இடைமறிக்கப்பட்டன, அதே நேரத்தில் 71 ட்ரோன்கள் நாட்டின் எல்லைக்குள் விழுந்தன என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 8 குரூஸ் ஏவுகணைகளும் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்காளதேச நாட்டினர் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எமிராட்டி, எகிப்து, எத்தியோப்பியன், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஈரான், இந்தியா, வங்காளதேசம், இலங்கை, அஜர்பைஜான், யேமன், உகாண்டா, எரிட்ரியன், லெபனான், ஆப்கான், பஹ்ரைன், கொமோரியன் மற்றும் துருக்கிய நாட்டினர் 94 பேர் சிறு காயங்களுக்கு ஆளானார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும், அரசின் இறையாண்மை, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் அதன் நலன்கள் மற்றும் தேசிய திறன்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும், அரசின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எதையும் உறுதியாக எதிர்கொள்வதாகவும் விளக்கமளித்துள்ளது.
அதே நேரத்தில் “பொதுமக்கள் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறவும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel