ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று மாலை மீண்டும் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலை அமீரக வான் பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக இடைமறித்த போதிலும், கீழே விழுந்த இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் உடைந்த பாகங்கள் தாக்கி பரிதாபமாக ஒருவர் உயிரிழந்ததாக துபாய் அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவமானது, நேற்று சனிக்கிழமை மாலை துபாயின் அல் பர்ஷா பகுதிக்கு அருகில் நடந்ததாகவும், உயிரிழந்தவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட தகவல்களின் படி, கீழே விழுந்த ஏவுகணையின் பாகங்கள் வாகனத்தின் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதன் மூலம் ஈரானிய தாக்குதல்கள் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதில் இரண்டு பாகிஸ்தானியர்கள், ஒரு நேபாளி மற்றும் ஒரு வங்காளதேச நாட்டவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயில் நடந்த மற்றொரு தாக்குதல் சம்பவத்தில், வெற்றிகரமான இடைமறிப்பின் விளைவாக விழுந்த உடைந்த பாகங்கள், துபாய் மெரினாவில் உள்ள ஒரு கோபுரத்தின் முகப்பில் ஒரு சிறிய பாதிப்பை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். எனினும் இந்த சம்பவம் உடனே கட்டுப்படுத்தப்பட்டதாகவும், இதனால் எந்த காயங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் எட்டாவது நாளான நேற்று சனிக்கிழமை மட்டும், ஐக்கிய அரபு அமீரக வான் பாதுகாப்பு படையானது, 16 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 121 ட்ரோன்களையும் கண்டறிந்ததாக அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதில் 15 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதும், அதே நேரத்தில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை கடலில் விழுந்ததும் தெரியவந்துள்ளது.
அதேபோன்று, நேற்று மாலையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்பு வரை, அமீரகத்தை நோக்கி 121 ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதில் 119 ட்ரோன்கள் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாவும், அதே நேரத்தில் 2 ட்ரோன்கள் ஐக்கிய அரபு அமீ்கத்தின் நிலப்பரப்பில் விழுந்ததாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக, ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டதுடன், அங்கிருந்து தாக்குதல்கள் தொடங்கப்படாவிட்டால் அவர்களுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படாது என்று கூறியிருந்தார். எனினும், அவரின் அறிவிப்பிற்கு பின்னரும் கூட நேற்று இரவு வரை அமீரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel