அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள அதிகாரிகள் இன்று (மார்ச் 9 திங்கட்கிழமை), விமானப் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர், தலைநகரின் இரண்டு இடங்களில் ட்ரோன் ஏவுகணையின் உடைந்த பாகங்கள் விழுந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவங்களில் இரண்டு பேர் காயமடைந்தனர் என கூறப்பட்டுள்ளது. அதில், ஜோர்டானிய நாட்டவருக்கு சிறிய காயமும், எகிப்திய நாட்டவருக்கு மிதமான காயமும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறவும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்கள் பரவுவதைத் தவிர்க்கவும் அதிகாரசபை பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
மேலும் அமீரகம் முழுவதும் கேட்கப்படும் உரத்த சப்தங்கள் வெற்றிகரமான வான் பாதுகாப்பு இடைமறிப்புகளின் விளைவாகும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அத்துடன் இது தொடர்புடைய குழுக்கள் தொடர்ந்து முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன என்றும், மேலும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில், துபாய், ராஸ் அல் கைமா மற்றும் புஜைரா நகரங்களுடன் சேர்த்து, எமிரேட் இதுபோன்ற பல சம்பவங்களைக் கண்டுள்ளது. மார்ச் 5 ஆம் தேதி, வியாழக்கிழமை பிற்பகல் அபுதாபி தொழில்துறை நகரமான (ICAD) பகுதியில் ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதில் ஆறு பேர் காயமடைந்ததாக அபுதாபி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், மார்ச் 1 ஆம் தேதி, அபுதாபியில் இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் பாகங்கள் எதிஹாட் கட்டிடங்களை தாக்கியதில் ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் காயமடைந்தனர். இந்த சம்பவமும் சிறிய பொருள் சேதத்தை ஏற்படுத்தியது. அதே நாளில் முன்னதாக, சையத் சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.