வழக்கமான பணியின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறின் விளைவாக, கத்தாரின் கடல் எல்லைக்குள் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 7 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இதில் கத்தார் ராணுவ வீரர்களும் கத்தார் மற்றும் துருக்கியின் கூட்டுப்படை வீரர்களும் அடங்குவர். இதனையடுத்து , கத்தார் மற்றும் துருக்கிக்கு ஐக்கிய அரபு அமீரகம் தனது ஆதரவையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் (MoFA), இந்தத் துயரமான இழப்பிற்காக, கத்தார் ஆயுதப் படைகள் மற்றும் கத்தார்-துருக்கி கூட்டுப் படைகளைச் சேர்ந்த வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கும், அத்துடன் கத்தார் மற்றும் துருக்கி அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் நால்வர் கத்தார் ஆயுதப் படை வீரர்கள், ஒருவர் கத்தார்-துருக்கி கூட்டுப் படையைச் சேர்ந்தவர் மற்றும் இருவர் தொழில்நுட்ப வல்லுநர்கள் என துருக்கி மற்றும் கத்தார் பாதுகாப்பு அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.
கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, உயிரிழந்தவர்கள் விமானி கேப்டன் முபாரக் சலேம் தவே அல்-மர்ரி, சார்ஜென்ட் ஃபஹத் ஹாடி கானெம் அல்-கயாரின், கார்ப்பரல் முகமது மஹேர் முகமது மற்றும் கேப்டன் சயீத் நாசர் சமேக் (அனைவரும் கத்தார் ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள்); மேஜர் சினான் தஸ்தகின் (கத்தார்-துருக்கி கூட்டுப் படையைச் சேர்ந்தவர்); மற்றும் துருக்கிய குடிமைப் பணியாளர்களான சுலைமான் செம்ரா கஹ்ரமான் மற்றும் இஸ்மாயில் அனாஸ் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அமைச்சகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. கடலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் இருந்த மேற்கண்ட ஏழு பேருமே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கத்தார் அமைச்சகம் தெரிவித்துள்ளது.