அமீரகத்தின் தேசிய வானிலை மையமானது ஒரு வாரத்திற்கு அமீரகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்த நிலையில் அதன்படி ஓரிரு தினங்களாகவே ஆங்காங்கே மழை, ஆலங்கட்டி மழை என பெய்து வந்தது.
அதனை தொடர்ந்து இன்று (மார்ச் 23) அமீரகத்தின் துபாய், அபுதாபி, ஷார்ஜா ராஸ் அல் கைமா என பல்வேறு எமிரேட்களிலும் மழையின் தாக்கம் காணப்படுகின்றது. இதனையொட்டி ஒவ்வொரு எமிரேட்டிலும் மக்களுக்கான எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகின்றன.
துபாயில் நிலவி வரும் நிலையற்ற வானிலை மற்றும் மழையால் ஏதேனும் அவசர உதவி தேவைப்படும் நபர்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- துபாய் சிவில் டிஃபென்ஸ்: 997
- துபாய் ஆம்புலன்ஸ்: 998
- துபாய் போலீஸ்: 999
- DEWA (Electricity & Water): 991
- RTA (Roads & Transport Authority): 800 9090
- துபாய் முனிசிபாலிட்டி: 800 900
- துபாய் ஹெல்த்: 80060
அபுதாபியில் காலையிலேயே இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் பல சாலைகளில் வேக வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டெலிவரி ரைடர்கள் மோசமான வானிலை நிலவும் பட்சத்தில் தங்களின் டெலிவரி சேவைகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஷார்ஜாவில் கன மழையை சமாளிக்க 1,400 பேர் கொண்ட குழுவுடன் தயார்நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சியானது 180 தொட்டிகள், 140 அதிக கொள்ளளவு கொண்ட பம்ப்கள், ஆறு மேம்பட்ட வாகனங்கள் மற்றும் சிக்கிய வாகனங்களை மீட்க 20 மீட்பு இயந்திரங்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. கூடுதலாக, தெருக்கள் மற்றும் சாலைகளில் இருந்து தண்ணீரை விரைவாக அகற்றுவதற்காகவும் முயற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் தங்கள் பிரச்சனைகளை 993 என்ற எண்ணில் உள்ள நகராட்சி அழைப்பு மையம் மூலம் தெரிவிக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த அழைப்பு மையம், கருத்துக்களைப் பெறுவதற்கும், அவசரகால நடவடிக்கைகளை நிகழ்நேரத்தில் ஒருங்கிணைப்பதற்கும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஷார்ஜாவில் இன்று வானிலை காரணமாக அனைத்து பார்க்குகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள் திருப்பி விடுப்பதற்கான வைப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் ராஸ் அல் கைமாவிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளத்தாக்குகள், கால்வாய்கள் போன்ற பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வானிலையானது வரும் மார்ச் 27 ம் தேதி வரை நீடிக்கும் என்று அமீரகத்தின் தேசிய வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.