அமீரகத்தில் ஈரானின் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்படும் போதிலும் அவ்வப்போது உடைந்த பாகங்கள் கீழே விழுவதில் அவ்வப்போது அசம்பாவிதம் ஏற்படுகின்றது. அதே போன்ற ஒரு சம்பவத்தில் இன்று (வியாழன்) காலை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அபுதாபியின் ஸ்வைஹான் ஸ்ட்ரீட்டில், வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையிலிருந்து சிதறிய பாகங்கள் விழுந்து உயிரிழப்புகளையும் சொத்து சேதத்தையும் ஏற்படுத்தியதாக அபுதாபி அதிகாரிகள் காலையில் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சம்பவத்தின் விளைவாக, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் உயிரிழந்தனர், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர், மற்றும் பல வாகனங்கள் சேதமடைந்தன என கூறப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது உயிரிழந்த நபர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூவர், ஓர் எமிராட்டி, ஓர் ஜோர்டானியர் மற்றும் ஓர் இந்தியர் ஆவர் என்றும் அவர்களது காயங்கள் மிதமானது முதல் கடுமையானது வரை உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வமான ஆதாரங்களை மட்டுமே நம்புமாறும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத அறிக்கைகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
வியாழக்கிழமை காலை, ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் (MOD) உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் நிலைமை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்கத் தகவல்களை மட்டுமே நம்புமாறு பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாகவும் மேலும் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் மூன்று உறுப்பினர்கள் பணியின்போது வீரமரணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத்தின் பாகங்கள் கீழே விழுந்தது தொடர்பான தனித்தனி சம்பவங்களில் பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாலஸ்தீனம் உள்ளிட்ட ஆறு நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.