அமீரக செய்திகள்

ஒரே விமானத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 13 கிலோ தங்கம், 120 ஐஃபோன்கள், 84 ஆண்ட்ராய்டு ஃபோன்கள்..!! கடத்தலில் ஈடுபட்ட 113 பயணிகள்..!! மஸ்கட்-சென்னை விமானத்தில் நடந்த சம்பவம்…!!

மஸ்கட்டிலிருந்து சென்னைக்கு பறந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளில் 113 பேர் சுமார் 6.18 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள பொருட்களை கடத்த முயன்றதாக இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பயணிகளில் பெரும்பாலானோர் தங்கம், ஐஃபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஃபோன்கள் போன்ற ஆடம்பரமான பொருட்களை கடத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடத்தல் கும்பல் பயணிகளிடம் சாக்லேட் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற பரிசுகளுடன் கமிஷன் தருவதாக வாக்குறுதியளித்து, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் அதிக அளவில் தங்கம், ஐபோன்கள், லேப்டாப்கள், குங்குமப்பூ போன்ற ஆடம்பரப் பொருட்களை கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக விரைந்த அதிகாரிகள் விமான நிலையத்தில் அனைத்து பயணிகளையும் தடுத்து நிறுத்தி நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, பயணி ஒருவர், விமானத்தில் இருந்த சக பயணி தன்னிடம் ஒரு மொபைல் போனைக் கொடுத்து, சென்னை விமான நிலையத்தில் ஐஃபோன் சென்றடைந்ததும், கமிஷன், சாக்லேட்டுகள் மற்றும் இன்னபிற பொருட்களைத் தருவதாகக் கூறியதாக ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மணிக்கணக்கில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, 73 பயணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர், மேலும் மற்ற 113 பயணிகளிடம் செய்யப்பட்ட சோதனையில் தங்கக்கட்டிகள் மற்றும் தங்க வளையல்களை உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அவர்களின் சூட்கேஸ் மற்றும் லக்கேஜ்களை சோதனையிட்டதில், 13 கிலோ தங்கம், 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், லேப்டாப்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, சம்பந்தப்பட்ட 113 பயணிகளும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!