அமீரக செய்திகள்

அபுதாபி: நாளை பிரம்மாண்டமாக துவங்கவிருக்கின்றது 114 நாட்கள் நடைபெறவுள்ள ஷேக் சையத் ஃபெஸ்டிவல்..!!

அபுதாபியின் அல் வத்பாவில் (Al Wathba) ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பிரம்மாண்டமான ஷேக் சையத் ஃபெஸ்டிவலின் புதிய சீசன் நாளை வெள்ளிக்கிழமையன்று தொடங்க உள்ளது. 114 நாட்கள் நடைபெறும் இந்தாண்டு பதிப்பில் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சிகள், பிரமிக்க வைக்கும் ட்ரோன் ஷோ மற்றும் நாட்டின் வளமான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட பரந்த அளவிலான செயல்பாடுகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபெஸ்டிவல் அமீரக தலைவர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் ஆதரவிலும், துணைத் தலைவர், துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவரான ஷேக் மன்சூர் பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் நேரடி மேற்பார்வையிலும் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஜனாதிபதியின் ஆலோசகரும், விழாவின் உயர் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான ஷேக் சுல்தான் பின் ஹம்தான் அல் நஹ்யான் அவர்கள், திருவிழாவின் தொடக்கத்திற்கு முன்னதாக, அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வு செய்து, ஏற்பாட்டாளர்களின் முயற்சிகளுக்கு திருப்தியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் தந்தை மறைந்த ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் பெயரில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த ஃபெஸ்டிவல், அபுதாபியை ஒரு முக்கிய சுற்றுலா மற்றும் கலாச்சார தலமாக மேம்படுத்துவதற்கு பங்களித்துள்ளது.

இதற்கு முந்தைய பதிப்பில் சுமார் 2.5 மில்லியனுக்கும் அதிகமான விருந்தினர்கள் மற்றும் 7 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஃபெஸ்டிவலின் செயல்பாடுகளை அனுபவித்ததாக உயர் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் அப்துல்லா முபாரக் அல் முஹைரி என்பவர் தெரவித்துள்ளார்.

சிறப்பம்சங்கள்:

இந்தாண்டு நவம்பர் 17 வெள்ளிக்கிழமை தொடங்கும் கலாச்சார நிகழ்வு, அடுத்த ஆண்டு மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இது குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பணக்கார எமிராட்டி பாரம்பரியத்தை அனுபவிக்கவும், மிகவும் சுவையான உணவை ருசிக்கவும் மற்றும் மறக்க முடியாத தருணங்களை உருவாக்கவும் சிறந்த வாய்ப்பை வழங்கும்.

இத்தகைய பிரபலமான விழாவின் தொடக்க நாளில் பார்வையாளர்கள் வாணவேடிக்கை மற்றும் ட்ரோன் காட்சியை கண்டு ரசிக்கலாம். அதையடுத்து, ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 10 மணிக்கு பட்டாசு வெடிக்கும் நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

மேலும், இந்த ஃபெஸ்டிவல் அரிய விலங்குகள் மற்றும் பறவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள முதல்-வகையான ‘Flora and Fauna Reserve’ ஐ அறிமுகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பார்வையாளர்களைப் பயமுறுத்த ‘ஹவுஸ் ஆஃப் ஹாரர்’, எமிராட்டி பாரம்பரியத்தின் கைவினைப்பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை அனுபவிக்க ஹெரிட்டேஜ் வில்லேஜ் போன்றவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

கூடுதலாக, குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் ‘ஃபன் சிட்டி’யில் பரபரப்பான ரைடுகளை அனுபவிக்கலாம். இவற்றுடன் யூனியன் பரேட், கார் ஷோ சேலஞ்ச், எமிரேட்ஸ் ஃபவுன்டைன், க்ளோ ஃப்ளவர் கார்டன், பறக்கும் உணவகம் மற்றும் குழந்தைகள் வில்லேஜ் என எண்ணற்ற பொழுதுபோக்கு செயல்பாடுகள் பார்வையாளர்களை உற்சாகத்தில் மூழ்கடிக்க காத்திருக்கின்றன.

இந்த மாபெரும் ஃபெஸ்டிவல், வார நாட்களில் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் அதிகாலை 1 மணி வரையிலும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!