அமீரக செய்திகள்

UAE: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்தானதால் அவதிக்குள்ளான அமீரகவாசிகள்..!! மற்ற விமானங்களில் எகிறிய டிக்கெட் விலை..!!

இந்தியாவின் பட்ஜெட் கேரியரான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் பணிபுரியும் 200 க்கும் மேற்பட்ட கேபின் குழு ஊழியர்கள் திடீரென நோய்வாய்ப்பட்ட விடுப்பை (sick leave) எடுத்ததால், விமான நிறுவனத்தின் 70 க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானச் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிக்கவிருந்த பயணிகள் விமான நிலையங்களில் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸின் இந்த திடீர் விமான ரத்து மற்றும் தாமதங்களால் அமீரகம் உட்பட பல நாடுகளிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்துள்ளனர். இதில் இந்தியா மற்றும் அமீரகம் இடையே இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான அமீரக குடியிருப்பாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இது குறித்து, கொச்சியில் இருந்து ஷார்ஜாவுக்குப் பறக்கத் திட்டமிட்டிருந்த ஒரு அமீரக குடியிருப்பாளர் ஒருவர் பேசுகையில், தான் விமான நிலையத்தை அடைந்தபோது, நீண்டநேரம் ஆகியும் செக்-இன் வாயில்கள் திறக்கப்படாமல் இருந்ததாகவும், தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் திடீரென விமான ரத்து அறிவிக்கப்பட்டதும் அங்கிருந்த பயணிகளிடையே சலசலப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இன்று வேலையில் சேர வேண்டிய ஒரு நபர், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய மற்றொரு நபர் என அமீரகத்திற்கு திரும்ப வேண்டிய பலரும் கடும் அவதிக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மற்ற விமான நிறுவனங்களில் பயணிக்க விமான டிக்கெட்டை சரிபார்த்த போது, டிக்கெட்டின் விலை 35,000 ருபாய் வரையிலும் உயர்ந்து இருப்பதாகவும், ஒரு சிலர் வேறு வழியில்லாமல் டிக்கெட் புக் செய்து அமீரகத்திற்கு பயணித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விமான சேவைகள் ரத்து தொடர்பாக வெளியான செய்திகளின் படி, விமானச் சேவை ரத்து மற்றும் விமானம் புறப்படுவதில் தாமதங்கள், நேற்று செவ்வாய் இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை நீடித்ததாக கூறப்படுகிறது, இதனால் விமான நிறுவனம் அதன் திட்டமிடப்பட்ட விமான பயணங்களை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸில் பணிபுரியும் சில மூத்த பணியாளர்கள் தங்களின் உடல்நலப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி, விமான நடவடிக்கைகளுக்கு சற்று முன்பாக தங்களின் மொபைல் போன்களை சுவிட்ச் ஆஃப் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசி நேரத்தில், பணியாளர்கள் அனைவரும் ஒருசேர நோய்வாய்ப்பட்ட விடுப்பு எடுத்ததால், உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில், மாற்று ஊழியர்கள் இல்லாததால், விமானச் சேவை ஸ்தம்பித்துப் போனதாகவும்,  தற்பொழுது, இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் கேபின் பணியாளர்கள் பற்றாக்குறையால், விமானச் செயல்பாடுகளில் பெரிய சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், விமானத் தடங்கலால் பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் பயணத்தை பிந்தைய தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம் அல்லது விமானத்தை ரத்து செய்து முழு பணத்தையும் திரும்பப் பெறலாம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திடீரென ‘சிக் லீவ்’ எடுத்த 200 கேபின் குழுவினர்.. ஸ்தம்பித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சர்வதேச விமான சேவை.. 70 விமானங்கள் ரத்து..!!

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!