அமீரக செய்திகள்

திடீரென ‘சிக் லீவ்’ எடுத்த 200 கேபின் குழுவினர்.. ஸ்தம்பித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சர்வதேச விமான சேவை.. 70 விமானங்கள் ரத்து..!!

இந்தியாவின் பட்ஜெட் கேரியரான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் பணிபுரியும் 200 க்கும் மேற்பட்ட கேபின் குழுவினர் விமான நிறுவனத்தின் தவறான நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஒரே நாளில் ‘சிக் லீவ்’ எடுத்துள்ளனர். இதனால் இன்று மே 8 ஆம் தேதி 70 க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டும் சில விமானங்களின் செயல்பாடுகளில் தாமதமும் ஏற்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட கேபின் பணியாளர்கள் பற்றாக்குறையால் மே 7 இரவு முதல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதன் விமான இயக்கங்களில் இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்நிலைமை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்குள்ளேயும் கவலையை எழுப்பியுள்ளதாகவும், இதனை அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியான செய்திகளின் படி, விமானச் சேவை ரத்து மற்றும் விமானம் புறப்படுவதில் தாமதங்கள், நேற்று செவ்வாய் இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை நீடித்ததாக கூறப்படுகிறது, இதனால் விமான நிறுவனம் அதன் திட்டமிடப்பட்ட விமான பயணங்களை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸில் பணிபுரியும் சில மூத்த பணியாளர்கள் தங்களின் உடல்நலப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி, விமான நடவடிக்கைகளுக்கு சற்று முன்பாக தங்களின் மொபைல் போன்களை சுவிட்ச் ஆஃப் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசி நேரத்தில், பணியாளர்கள் அனைவரும் ஒருசேர நோய்வாய்ப்பட்ட விடுப்பு எடுத்ததால், உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில், மாற்று ஊழியர்கள் இல்லாததால், விமானச் சேவை ஸ்தம்பித்துப் போனதாகவும்,  தற்பொழுது, இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இத்தகைய நெருக்கடியான சூழலுக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கோரி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது பற்றி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எங்கள் விமானக் குழுவில் ஒரு பகுதியினர் கடைசி நிமிடத்தில் நோய்வாய்ப்பட்ட விடுப்பை அறிவித்ததால், நேற்றிரவு தொடங்கி, விமானம் தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வதற்காக நாங்கள் பணியாளர்களுடன் பேச்சவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இதன் விளைவாக எங்கள் விருந்தினர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க இந்த சிக்கலை தீவிரமாக நாங்கள் எதிர்கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், விமானச் சேவை ரத்து செய்யப்படுவதால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு முழு பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது மற்றொரு தேதிக்கு திட்டமிடல் விருப்பம் வழங்கப்படும் என்றும், இன்று ஏர் இந்தியா கேரியருடன் பயணிக்கும் விருந்தினர்கள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், தங்கள் விமானம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூத்த பணியாளர்களின் திடீர் நோய்வாய்ப்பட்ட விடுப்பு, விமானத் துறையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முன்னதாக, ஏப்ரல் 1 ஆம் தேதி விஸ்தாரா இதே போன்ற   சிக்கல்களை எதிர்கொண்டது. அதன் விமானிகள் திடீரென நோய்வாய்ப்பட்டதால் 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் இதே சிக்கலை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!