இந்தியாவில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு… பதற்றத்தில் இந்தியா!!
உலகம் முழுவதும் 92000 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். 3000 க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் இறந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் 5 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது 21 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தியாவில் டெல்லி மற்றும் தெலுங்கானாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் கண்டறியப்பட்டு, தற்பொழுது அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் தனி கவனம் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இத்தாலியில் இருந்து சுற்றுலாவிற்கு ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரிற்கு வந்த பயணி ஒருவருக்கு வைரஸின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவிற்கு இத்தாலியில் இருந்து வந்த 21 பேர் கொண்ட குழுவை பரிசோதனை செய்யும் பொது அவர்களில் 15 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இந்தியாவில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் உண்டாகியுள்ளது
நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா வைரஸ் குறித்து பீதி அடைய தேவையில்லை. தற்பொழுது நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாம் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தார்.
முன்னதாக கடந்த மாதம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த மூன்று நபர்கள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.