ஈரானில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பரவியது கொரோனா!!
கொரோனா வைரசின் பாதிப்பு ஈரானில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் பரவியுள்ளது என்று ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும் ஈரானில் குறுகிய காலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் திறன்களைக் கொண்டு கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் குறைக்கப்படும் என்று ரூஹானி அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார்.
மத்திய கிழக்கு நாடுகளில் சீனாவுக்கு அடுத்த படியாக ஈரானில் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையில் உள்ளது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளில் பெரும்பாலானவை ஈரானில் இருந்து பரவியதாகவே இருக்கின்றன.
ஈரானின் சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று 92 பேர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டதாக அறிவித்தது. இது உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையை கொண்டதாக கூறப்படுகிறது. 2,922 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரானில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளவுக்கதிகமான வைரஸ் பரவலினால், அந்நாட்டில் உள்ள 54,000 சிறைக்கைதிகள் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கிலான சுகாதார பணியாளர்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல வழிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகம் WHO வின் ஒத்துழைப்புடன் 7.5 டன் அளவிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியது நினைவிருக்கலாம்.
ஈரானில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு முதன்முதலில் அறிவிக்கப்பட்டதிலிருந்து பல ஈரானிய அதிகாரிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு மூத்த அதிகாரி திங்களன்று இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.