கொரோனா வைரஸ் : ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு!!
வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு ஈரான். ஒவ்வொரு நாளும் அந்நாட்டிலுள்ள பல பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிதீவிரமாக உயர்ந்து கொண்டு வருகிறது.
இன்று ஒருநாள் மட்டும் 591 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளில் மட்டும் 15 பேர் வைரஸால் இறந்துள்ளனர். இதனால் தற்பொழுது ஈரானில் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,513 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஈரானில் 107 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்.
கொரோனா வைரஸின் கொடிய தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள ஈரானில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் சயீத் நமகி, கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் காகித பணம் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். கூடுதலாக, முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயணத்தை மட்டுப்படுத்த அதிகாரிகள் சோதனைச் சாவடிகளை நிர்வகிக்கத் தொடங்குவார்கள் என்றும் கூறியுள்ளார். மக்களை அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், சுகாதார அமைச்சகத்தின் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் சயீத் நமகி தொலைக்காட்சி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும், வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக, மக்கள் தங்கள் வாகனங்களில் எரிவாயுவை நிரப்ப வாகனங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் உதவியாளர்கள் தங்கள் வாகனங்களில் எரிவாயுவை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வளைகுடா நாடுகளில் பரவிய கொரோனா வைரசில் பெரும்பாலானவை ஈரானில் இருந்தே பரவியது குறிப்பிடத்தக்கது. ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளே உலக அளவில் சீனாக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிக இறப்புகளை சந்தித்த நாடுகளாகும்.