அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு..!! மக்கள் பொதுவெளியில் கூடுவதை தவிர்க்க MoHAP அறிவுறுத்தல்!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்(The Ministry of Health And Prevention-MoHAP) இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் அமீரகத்தில் மேலும் 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. MoHAP இது பற்றிக் கூறுகையில் வெவ்வேறு நாடுகளைச்சேர்ந்த 15 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
ஆரம்பகால கண்காணிப்பு மற்றும் அறிக்கையின் அடிப்படையில் தாய்லாந்து, சீனா, மொராக்கோ மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிச்சேர்ந்தவர்களில் தலா ஒருவரும், சவூதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் ஈரானைச் சேர்ந்தவர்களில் தலா இரண்டு பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மூன்று பேரும் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவர்.
கூடுதலாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாட்டைச்சேர்ந்த இருவரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் ஏற்கெனவே துபாய் சைக்கிள் டூரில்(Dubai Cycle Tour 2020) பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. மேலும், வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேர் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் கொரோனா அறிகுறி இருக்கிறதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக MoHAP தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சகம் அமீரகத்தில் தற்பொழுது வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் குணமடைந்து விட்டதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 7 பேர் குணமடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் நிலைமையைக் கண்காணிக்கவும், கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க விரைவான நடவடிக்கைகளை எடுக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவதாக MoHAP குறிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தரங்களைப் பின்பற்றி, வெப்ப ஸ்கேனர்கள் மற்றும் தனிமைப்படுத்தும் அறைகள் உட்பட, கொரோனா வைரஸைக் கையாள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்வதற்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களுடன் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று MoHAP உறுதியளித்தது.
MoHAP தனது அறிக்கையில் பொது மக்களுக்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கான தனிப்பட்ட சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கூறியுள்ளது. மேலும் கொரோனா வைரசிற்கான விழிப்புணர்வு வழிமுறைகளை MoHAP-ன் இணையதளத்திலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் தெரிந்துகொள்ளுமாறும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீரில் கைகளைக் கழுவுதல், கிருமிகள் மற்றும் வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க இருமல் அல்லது தும்மும்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது உள்ளிட்ட தொற்று நோய்களைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு சுகாதார நடத்தைகளை பின்பற்றவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாச அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட நபர்கள், மற்றவர்களுக்கும் நோய் பரவாமல் தடுக்க கூட்டம் மற்றும் பொது இடங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெள்ளிக்கிழமையில் நடைபெறும் தொழுகை நேரத்தை குறைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.