இந்தியா : தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…107 ஆக உயர்வு..!!! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!!!
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸிற்கு உலகம் முழுவதும் 1,50,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸிற்கு கர்நாடகாவில் ஒருவர், டெல்லியில் ஒருவர் என இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 107 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரசிற்கான எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை, கோவை,மதுரை, திருச்சி விமானநிலையங்களில் கொரோனா வைரஸிற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு கொரோனா பாதிப்பையொட்டி தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகளுக்கும், தொடக்கப்பள்ளிகளுக்கும் இந்த மாதம் இறுதி வரை விடுமுறை (31.3.2020) அளித்துள்ளது.
கூடுதலாக, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் இருக்கும் திரையரங்குகளையும் , வணிக வளாகங்களையும் இந்த மாதம் இறுதி வரை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இத்தாலியில் கொரோனா பிடியில் சிக்கியிருந்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட 218 இந்தியர்கள் இத்தாலியின் மிலன் நகரிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்பியுள்ளனர். அவர்கள் இந்தோ திபெத் காவல்துறையினரின் முகாமிற்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.