கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலி… வளைகுடா நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு!!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால், மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு போர்டல் (Middle East employment portal), நடத்திய ஆய்வறிக்கையின் அடிப்படையில், வளைகுடா நாடுகளில் உள்ள நிறுவனங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வீட்டிலிருந்தே ஊழியர்கள் வேலை செய்வதற்கான திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்ஃப் கோஆபரேஷன் கவுன்சிலின் (GCC) ஆறு நாடுகளில் 1,600 நிறுவன நிர்வாகிகள், மேலாளர்கள் மற்றும் மனிதவள வல்லுநர்களிடமிருந்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில், வளைகுடா நாடுகளை அடிப்படையாக கொண்ட வணிக நிர்வாகங்களில் 35 சதவீதம் வரை விரைவில் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 6% பேர் தற்பொழுது வீட்டிலிருந்து வேலைகளை செய்யும் திட்டத்தை தொடங்கியதாகவும், 5 சதவீதம் பேர் விரைவில் இந்த திட்டங்கள் தொடங்கப்படுவதை உறுதிப்படுத்தியும் , 12 சதவீதம் பேர் இந்த கருத்தை மறுபரிசீலனை செய்யும் நோக்கிலும் , மேலும் 12 %பேர் ஏற்கெனவே தொலைதூர வேலை ஏற்பாடுகளை செய்து கொண்டு வருவதாகவும் தெரிகிறது.
இதற்கிடையில், கணக்கெடுப்பின் போது பதிலளித்தவர்களில் மீதமுள்ள 54 சதவீதம் பேர் தங்கள் நிறுவனங்களில் இதுவரை தொலைதூர வேலைக்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில் 11 சதவீதம் பேர் தங்கள் நிறுவனங்கள் நிச்சயம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளனர்.
வளைகுடா நாடுகளில், பஹ்ரைனில் உள்ள நிறுவனங்களில் 38 % நிறுவனங்கள் இந்த திட்டத்தை ஆதரித்துள்ளன. இதுவே மற்ற அனைத்து நாடுகளை விடவும் இத்திட்டத்தை அதிக சதவீத நிறுவனங்கள் ஏற்றுக்கொண்ட நாடாகும். இதைத் தொடர்ந்து கத்தார், யுஏஇ மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் தலா 37 சதவீத நிறுவனங்களும், சவூதி அரேபியாவில் 30 சதவீத நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளன. அதே நேரத்தில் ஓமானில் உள்ள வணிக நிறுவனங்களில் 18 சதவீத நிறுவனங்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு ஒத்துழைத்துள்ளன.
நிறுவனங்களில் ஏற்பட்ட தாக்கம்
சர்வேயானது ஊழியர்களுக்கு மட்டும் இல்லாமல் நிறுவனங்களுக்கும் எடுக்கப்பட்டது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பானது, வணிக நிறுவனங்களுக்கு இத்திட்டத்தை தவிர்த்து பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. வணிக ரீதியிலான பயணத்தை கட்டுப்படுத்துதல், ஊழியர்களுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் சப்ளையர்களுடன் ஊழியர்களின் வெளிப்புற சந்திப்புகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை இதிலடங்கும்.
கொரோனா வைரஸ் பாதிப்பின் விளைவாக வணிகத்தில் சரிவை எதிர்கொண்டுள்ள சில நிறுவனங்கள், அதை சரிப்படுத்த ஊழியர்கள் பணிநீக்கங்கள் மற்றும் ஊதியமில்லா விடுமுறை ஆகியவற்றை செயல்படுத்தும் திட்டங்களில் இருப்பதாகத் தெரிகிறது. கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க 42 சதவீதம் பேர் எந்த வித திட்டங்களையும் மாற்றங்களையும் செயல்படுத்தப்போவதில்லை எனத்தெரிகிறது.
வணிகரீதியிலான பாதிப்புகள்
வணிகத்தில் முக்கிய பாதிப்பாக, வளைகுடா நாடுகள் வெளிநாடுகளுக்கும் தனது அண்டை நாடுகளுக்கும் பயணம் செய்வதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், வணிகரீதியிலான பயணங்கள் மேற்கொள்வதில் வணிக நிறுவனங்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றன.
மேலும், நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான தேவை குறைந்துவிட்டதாக அறிவித்தன. வைரசிற்கான தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள், அதிகளவில் மக்கள் கூடும் நிகழ்வுகள், கண்காட்சிகள் போன்றவற்றை நிறுத்தி வைத்துள்ளதால் பல வணிக நிறுவனங்களுக்கு வேலை குறைந்து வருகிறது.
கூடுதலாக, பொருட்களை பாதுகாப்பத்திலும் சிரமம் இருப்பதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக, சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தொழிற்சாலை மூடல் காரணமாக நிறுவனங்களுக்கு வருவதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிகிறது. இதனால், ஐந்தில் ஒரு பகுதியினர் தங்கள் நிறுவனம் மாற்று சப்ளையர்களை தீவிரமாக தேடுவதாகக் கூறி இருக்கின்றனர்.