இத்தாலியின் வடக்கு மாகாணம் முழுவதும் சீல்…16 மில்லியன் மக்கள் பரிதவிப்பு…கொரோனா எதிரொலி!!!
உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளும் தடுப்பு நடவடிக்கைகளும் எடுத்தாலும் கொரோனாவின் பாதிப்பானது கட்டுக்கடங்காமல் உலகளவில் 1,06,000க்கும் அதிகமானோரை பாதித்து விட்டது. ஒவ்வொரு நாளும் பல்வேறு நாடுகளிலுள்ள மனிதர்கள் தொடர்ந்து வைரஸால் பாதித்த வண்ணமே உள்ளனர்.
சீனாவில் தொடங்கிய இந்த கொடிய நோயானது இன்று உலகம் முழுவதும் 95 நாடுகளுக்கு மேல் பரவியிருக்கிறது. வைரஸ் தோன்றிய இடமான சீனாவிலேயே அதிக பாதிப்புகளையும் இறப்புகளையும் கண்டிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக தென்கொரியா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 3,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் இருக்கும் இத்தாலி நாடானது ஆசியாவை விட்டு வெளியே உள்ள நாடுகளில் அதிகம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடாகும். அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் பல பேர் தொடர்ந்து வைரஸால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தாலியில் இருந்தே ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகளுக்கு அதிகளவில் கொரோனா வைரஸானது பரவுகிறது.
சனிக்கிழமை நிலவரப்படி இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஒரே நாளில் 1,247 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,883 ஐ எட்டியுள்ளது.
கொரோனாவின் பாதிப்பைத் தொடர்ந்து அந்நாட்டில் பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும்,
பனிச்சறுக்கு மற்றும் பொது நிகழ்வுகள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் திரையரங்குகள் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அலுவலகரீதியிலான சந்திப்புகளும் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொடர்ந்து நாடு முழுவதும் பரவி வருவதால் லோம்பார்டியின்(Lombardy) முழுப் பகுதியும் பிற பிராந்தியங்களில் உள்ள பல மாகாணங்களும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இத்தாலிய பிரதமர் ஜியூசெப் கோன்டே(Giuseppe Conte) அறிவித்துள்ளார்.
உலகெங்கும் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்ததால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் வடக்கு இத்தாலியில் மில்லியன் கணக்கான மக்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். மிலன், வெனிஸ் உள்ளிட்ட வடக்கின் பெரிய பகுதிகளுக்கு வெளியேயும் உள்ளேயும் செல்வதை கண்டிப்பாக கட்டுப்படுத்தும் திட்டத்தில், தான் கையெழுத்திட்டதாக பிரதமர் ஜியூசெப் கோன்டே ட்விட்டரில் தெரிவித்தார்.
இதன் மூலம் கிட்டத்தட்ட 14 மாகாணங்களில் உள்ள சுமார் 16 மில்லியன் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏப்ரல் 3 வரை அரசாங்கம் கூறப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் மக்களுக்கு கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பைத்தொடர்ந்து இத்தாலியின் பொருளாதாரமானது கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. வெளிநாட்டவர்கள் அங்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டினர் அதன் கலாச்சார பொக்கிஷங்களைப் பார்வையிடுவதோ அல்லது அதன் விலைமதிப்பற்ற கைவினைப் பொருட்களை வாங்குவதோ இல்லாமல், ஃபேஷன் முதல் உணவு உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் சரிவைக் கண்டுள்ளன.
இத்தாலியின் உற்பத்தி மற்றும் நிதித் தொழில்களின் மையமான வடக்கில் முழு நகரங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பல விதத்தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஹோட்டல், உணவகங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் இது போன்ற பல இடங்கள் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பில்லியன் கணக்கான இழப்புகளை சந்தித்து வருகின்றது.