கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை..!!! சவூதி மன்னர் அசத்தல்…!!! விதிமீறியவர்களுக்கும் பொருந்தும் எனத் தகவல்…!!!

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அனைவருக்கும் அந்நாட்டின் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டின் சுகாதார அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் பின் பாவ்ஸான் அல்-ரபியா, திங்களன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சவூதி மன்னர் வெளியிட்ட இந்த உத்தரவை அறிவித்தார். மேலும் இது அந்நாட்டில் உள்ள குடிமக்கள், குடியிருப்பாளர்கள் (ரெசிடென்ஸ் விதிமுறைகளை மீறியவர்கள் உட்பட ) என அனைவருக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டார்.
King Salman bin Abdulaziz orders to provide free health care to violators of residency, labor regulations, and border security who are infected or suspected of being infected with novel Coronavirus in governmental and private hospitals without any legal consequences.#SPAGOV pic.twitter.com/NNcKsCq0np
— SPAENG (@Spa_Eng) March 30, 2020
குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுப்பதற்கும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும் மன்னர் சல்மான் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அல்-ரபியா கூறினார். சவூதி மன்னரின் இந்த உத்தரவுக்கு சவுதி மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அவத் பின் சலேஹ் அல்-அவத் மன்னர் சல்மானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் இது பற்றிக்கூறுகையில், “இந்த தொற்றுநோயைக் கையாள்வதில் அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவானது அரசின் மனித மற்றும் தார்மீக அணுகுமுறையை பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார். தொடர்ந்து, சவுதி அரேபியா எவ்வித பாகுபாடுமின்றி நோயாளிகள் அனைவருக்கும் மிக உயர்ந்த மருத்துவ தரத்தின்படி தேவையான அனைத்து சிகிச்சைகளும் பெறுவதை உறுதி செய்வதில் ஆர்வமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1,453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் கொரோனா பாதித்து உயிரிழந்த்துள்ளனர் மற்றும் 115 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.