மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!!!

தமிழகத்தில் பல இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்தவர் நடிகர் விஜய். அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். தற்பொழுது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் எடுக்கப்படும் மாஸ்டர் படத்திற்கு நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக, விஜயும் விஜய் சேதுபதியும் ஒன்றாக இந்த படத்தில் இணைந்து நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரியதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மார்ச் மாதம் 15 ம் தேதி மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் 14 ம் தேதி காதலர் தினத்தன்று விஜய் தன் சொந்த குரலில் பாடிய “குட்டி ஸ்டோரி” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தின் படக்குழு இதுவரை மூன்று போஸ்டர்களை வெளியிட்டிருந்தது.

தற்பொழுது அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறப்போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தை வரும் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.