கொரோனாவின் பாதிப்பு தமிழகத்திலும் எதிரொலி : இந்திய அளவில் 40 ஐ கடந்தது!!

கொரோனா வைரஸின் கொடூர தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முன்னதாக, லடாக்கை சேர்ந்த இருவருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.
லடாக்கை சேர்ந்தவர்கள் ஈரானிலிருந்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் ஓமானிலிருந்து வந்ததாகத் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் தற்பொழுது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பகுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
மேலும், கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனா வைரஸால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 8 (ஞாயிற்றுக்கிழமை) இன்று, அவர்களை பரிசோதித்ததில் அவர்கள் ஐவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் K.K.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சமீபத்தில் இத்தாலிக்குப் பயணம் செய்ததாகவும் மீண்டும் நாட்டிற்குள் நுழையும் போது விமான நிலையத்தில் தங்களுடைய பயணம் பற்றிய விபரங்களை அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
எனவே விமான நிலையத்தில் அதிகாரிகள் அவர்களை பரிசோதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலி ஒன்றாகும். சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியிலேயே கொரானாவினால் அதிக நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டதால் நாங்கள் அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது ”என்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுடன் பேசிய அமைச்சர் ஷைலஜா கூறினார்.
தற்பொழுது அமெரிக்காவிலிருந்து கத்தார் வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி எனத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன்படி, இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் கடுமையான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.