அமீரகத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு.!!! 200ஐ நெருங்கியது பாதித்தவர்களின் எண்ணிக்கை..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரசிற்கு தற்பொழுது புதிதாக 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம், அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையிலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு பேர், கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து சமீபத்தில் திரும்பி வந்த பயணியாவார். இவர் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாதலால், இவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் இங்கிலாந்து, கனடா, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஈராக், குவைத், பாகிஸ்தான், இத்தாலி, பெரு, எத்தியோப்பியா, லெபனான், சோமாலியா, சூடான் மற்றும் எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் தற்பொழுது மூன்று பேர் குணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நேபாளத்தை சேர்ந்த இருவரும் ஈரான் நாட்டை சேர்ந்த ஒருவரும் கொரோனா வைரஸால் பாதித்து தற்பொழுது குணமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அமீரகத்தில் இதுவரை 41 பேர் கொரோனா வைரஸால் பாதித்து தற்பொழுது குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அமீரகத்தில் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை அமீரக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது வரை, அமீரகத்தில் உள்ள அனைத்து பொது இடங்களான, பீச், பார்க், இறைவழிபாட்டு இடங்கள், உடற்பயிற்சிக்கூடம் போன்ற அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் முறையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.