UAE உட்பட 9 நாட்டவர்களுக்கு சவுதி அரேபியாவிற்குள் நுழைய தற்காலிகத் தடை???

கொரோனா வைரஸின் தீவிர பரவலையொட்டி, சவுதி அரேபியா அரசானது ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 9 நாட்டுப் பயணிகளுக்கு சவுதி அரேபியாவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது. இதில் குவைத், பஹ்ரைன், எகிப்து, ஈராக், லெபனான், இத்தாலி, தென் கொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளும் அடங்கும்.
சவுதி அரேபியாவில் ஏற்படும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக்க கூடிய வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சவுதி அரசாங்கமானது, அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி சவுதி அரேபியாவில் உள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் திங்கள்கிழமை (இன்று) முதல் மீண்டும் அறிவிப்பு வெளியிடும் வரை விடுமுறை அளிக்கப்படும் என அந்நாட்டின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் கல்வி அமைச்சர் ஹமத் அல் ஷேக் இது பற்றிக் கூறுகையில், இந்த இடைப்பட்ட விடுமுறை காலங்களில் இணையவழிக் கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்வதற்கு முன் நாட்டில் கொரோனா வைரஸின் நிலைமை தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சவுதி அரேபியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அல் கதிஃப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் அம்மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு அப்பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.