அபுதாபி : புகழ்பெற்ற ஷேக் சையத் மசூதி தற்காலிகமாக மூடல்..!!! கொரோனா எதிரொலி…!!!
அபுதாபியில் மிக முக்கிய இடமான ஷேக் சையத் மசூதி (Sheikh Zyed Grand Masjid) , அபுதாபியிலேயே மிகப் பெரிய மசூதியாகவும் சிறந்த சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடக்கும் ஜும்மா தொழுகைக்கு அந்த மசூதியை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் தொழுவதற்கு வருகை தருவார்கள். இந்நிலையில், இந்த புகழ்பெற்ற ஷேக் சையத் மசூதி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அமீரகம் முழுவதும் பல நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் கண்காட்சிகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, அபுதாபியில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்களை இரு வாரத்திற்கு மூடப்படுவவதாக அபுதாபி அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், தற்பொழுது அபுதாபியில் மிக முக்கிய இடமாகக் கருதப்படும் ஷேக் சையத் மசூதியும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு நடைபெறும் இறைவணக்க வழிபாடுகள் நிறுத்தப்படும் என்றும் மேலும் பார்வையாளர்களுக்கும் அங்கு நுழைய தடை செய்யப்பட்டு மார்ச் 15 முதல் அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை மசூதி மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷேக் சையத் மசூதி மையம் (Sheikh Zayed Grand Mosque Centre) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி அமைச்சகத்தின் ( UAE’s Ministry of Presidential Affairs) அறிவிப்பில், இறைவணக்கம் செய்ய வருபவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஷேக் சையத் மஸ்ஜித் வரும் மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.
குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக மசூதியில் அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரசிற்கான அனைத்து நிறுவனங்களும் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இது வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும்,கொரோனா வைரசிற்கான தடுப்பு நடவடிக்கையாக, அபுதாபிக்கு வரும் அனைத்து க்ரூஸ் கப்பல்களுக்கும் (cruise ships) அபுதாபி துறைமுகத்திற்கு வருவதற்கு தற்காலிகமாக தடை விதிப்பதாக அபுதாபி அரசாங்கம் அறிவித்துள்ளது.