ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ்… பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு!!
ஐக்கிய அரபு அமீரகத்தில், கொரோனா வைரஸால் மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது.
தற்பொழுது பாதிக்கப்பட்ட நோயாளிகளில் இரண்டு பேர் ரஷ்யாவையும் , இரண்டு பேர் இத்தாலி நாட்டையும், ஒருவர் ஜெர்மன் நாட்டையும் மற்றொருவர் கொலம்பியா நாட்டையும் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற துபாய் டூர் 2020 ல் பங்கேற்று கடந்த வாரம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட இரண்டு இத்தாலிய பங்கேற்பாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த வாரத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பையொட்டி துபாய் டூர் 2020 இறுதிக்கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் இருந்த யாஸ் தீவில் உள்ள இரு ஹோட்டல்களானது தனிமைப்படுத்தப்பட்டு அங்கு இருக்கும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல்களில் இருந்த 6 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனை மூலம் தற்பொழுது தெரிய வந்துள்ளது.
அங்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சில அணிகள் பரிசோதனை முடிந்த பின் சொந்த நாட்டிற்கு திரும்பத்தொடங்கி உள்ளனர். இதுவரை 600 சைக்கிள் ரைடர்ஸ், பணியாளர்கள் மற்றும் மீடியாவை சேர்ந்தோர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பு கொண்ட சில நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு வாரங்களில் அவர்கள் அவ்வப்போது சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அபுதாபியின் சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் ஐந்து பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இதில் நாட்டின் முதன் முதலாக கொரோனா
வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட சீன குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.