அமீரக செய்திகள்

அமீரகத்தை மையமாகக் கொண்ட UAE எக்ஸ்சேஞ்சின் செயல்பாடுகளைக் கையகப்படுத்தியது UAE சென்ட்ரல் பேங்க்…!!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் UAE எக்ஸ்சேஞ்ச் சென்டரின் அனைத்து நடவடிக்கைகளும் மத்திய வங்கியின் மேற்பார்வையில் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் UAE எக்ஸ்சேஞ்ச் பணம் அனுப்புதல் மற்றும் அந்நியச்செலவாணி போன்ற செயல்பாடுகளின் புதிய பரிவர்த்தனைகளை, அதன் தாய் நிறுவனமான ஃபினாப்லரில் (Finabl) முறைகேடுகள் கண்டறியப்பட்ட பின்னர் நிறுத்தியுள்ளது.

UAE எக்ஸ்சேஞ்ச், தனது ஊதிய பாதுகாப்பு அமைப்பின் (Wages Protection System) செயல்பாடுகளைத் தவிர, அதன் கிளைகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் செயல்படும் அனைத்து புதிய பரிவர்த்தனைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும், ஊதிய பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகள் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்சேஞ்ச் அதன் நிலையான பணம் அனுப்பும் சேவைகளைத் தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தின் “ஊதியங்கள் பாதுகாப்பு முறைமை (Wages Protection System)” யில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இது UAE மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்கள் மூலம் நிறுவனங்கள் அளிக்கும் தொழிலாளர்களின் ஊதியங்களை வழங்கும் மின்னணு சம்பள பரிமாற்ற அமைப்பாகும்.

உலகளவில் பணபரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் நிறுவனமான UAE எக்ஸ்சேஞ்ச் ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது.

இந்நிலையில், அதன் அனைத்து புதிய பரிவர்த்தனைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி நிலுவைத் தொகை மற்றும் ஏற்கனவே தொடங்கப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் விரைவாகத் தீர்க்க வேண்டும் என்று மத்திய வங்கி செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து செயல்பாடுகளும் இருக்கிறதா என சரிபார்க்க ஒரு ஆய்வுக் குழு UAE எக்ஸ்சேஞ்சில் ஒரு பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. சோதனை முடிந்ததும் தேவைப்பட்டால் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அதன் தாய் நிறுவனமான ஃபினாப்லர் (Finablr), லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் இந்த நிறுவனமானது தற்பொழுது அதன் பங்குகளின் பட்டியலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

அதன் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி புரோமோத் மங்காட் கடந்த வாரம் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். மேலும் பினாப்லர் குழுமத்திற்குள் உள்ள மற்ற அனைத்து இயக்குநர்கள் மற்றும் நிறுவனங்களின் பிற அலுவலகங்களிலிருந்தும் விலக முடிவு செய்தார். அவரது ராஜினாமாவை வாரியம் ஏற்றுக்கொண்டது மற்றும் பல ஆண்டுகளாக குழுவிற்கு அவர் செய்த பங்களிப்புக்கு ப்ரோமோத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது. அதே வேளையில், வாரியம் பொருத்தமான தலைமை அதிகாரியைக் கண்டுபிடிக்கும் வரையிலும் இக்குழுவிற்கு தொடர்ந்து ஆதரவளிக்க ப்ரோமோத் ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!