அமீரக செய்திகள்

UAE : சமூகத்தில் கொரோனா தொடர்பான வெறுப்புணர்வு மற்றும் அவதூறு பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை..!! பாகுபாடுகளை தவிர்க்குமாறு இந்திய தூதர் அறிவுரை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப காலமாக இஸ்லாத்தையும் இந்திய முஸ்லிம்களையும் கொரோனா வைரஸுடன் தொடர்புபடுத்தி பல்வேறு செய்திகள் இந்துத்துவா கொள்கைகளை பின்பற்றக்கூடிய இந்திய நாட்டை சேர்ந்த சில நபர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தற்போது இவ்வாறான செய்திகளை பரப்புவோர் மீது அமீரக அரசின் 2015 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பாகுபாடு எதிர்ப்பு சட்டத்தின் (Anti-Discrimination Law) படி தண்டனையும் அபராதமும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இனம், மதம் சார்ந்து வேறுபாடு காட்டக்கூடிய அனைவருக்கும் அபராதமும் தண்டனையும் தேவைப்பட்டால் நாட்டிலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள் என அமீரகம் மட்டுமின்றி மற்ற வளைகுடா நாடுகளும் தெரிவித்துள்ளன.
 


இது பற்றி நேற்று (ஏப்ரல் 20) திங்களன்று அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பல நிலைகளிலும் பாகுபாடு காட்டாததன் மதிப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளன. பாகுபாடு என்பது நமது தார்மீக துணிவுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் இதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 19 அன்று இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக வெளியான செய்தியை தொடர்ந்து நேற்று அமீரகத்தின் இந்திய தூதரும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது “இனம், மதம், நிறம், சாதி, மொழி மற்றும் எல்லை என எந்த பாகுபாடும் இன்றி கொரோனா பரவுகிறது. கொரோனாவிற்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துடனும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் தொடங்கியதிலிருந்து இஸ்லாமோபோபியாவும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியது. இதன் விளைவாக நாடு முழுவதும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்கள் செய்யப்பட்டது, இந்திய மருத்துவமனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இந்துக்கள் முஸ்லிம்கள் என பிரித்து வைத்தது மற்றும் முஸ்லிம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது போன்ற நிகழ்வுகள் இந்தியாவின் சில பகுதிகளில் நடந்தேறியது. மேலும் முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களை புறக்கணிக்குமாறு வலது சாரி கோட்பாடு கொண்ட இந்துக்களால் செய்யப்பட்ட தீவிர பிரச்சாரம் மற்றும் முஸ்லிம்களை குறிவைத்து நாசவேலைகளிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டது போன்றவைகள் இந்தியாவின் மீதான உலக நாடுகளின் கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.

இந்நிலையில் அமீரகத்தில் பணிபுரிய கூடிய இந்துத்துவா கொள்கை கொண்ட சிலர் இஸ்லாத்தை பற்றியும், முஸ்லிம்களை கொரோனாவுடன் தொடர்புபடுத்தியும் சமூக வலைத்தளங்களில் அவதூறான செய்திகளை பரப்பி வந்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது அரசாங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து அவ்வாறு அவதூறு பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 நபர்களுக்கும் மேலான இந்துத்துவா கொள்கை கொண்ட இந்துக்களின் முகநூல் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. இது போன்ற அவதூறுகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல முக்கிய நபர்களும் இந்தியாவில் இஸ்லாத்தை இழிவு படுத்துவது பற்றியும், முஸ்லிம்களின் மீதான மோசமான நடத்தை குறித்தும் தங்களின் சமூக ஊடகங்களில் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த வாரம், ஐக்கிய அரபு அமீரக அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹென்ட் அல் காசிமி, “ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிப்படையாக இனவெறி மற்றும் பாகுபாடு காட்டும் எவரும் அபராதம் விதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறும்படி செய்யப்படும்” என்று எச்சரித்துள்ளார்.


மேலும் இது தொடர்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பானது (Organisation of Islamic Cooperation – OIC), இந்தியா தனது சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நாட்டில் “இஸ்லாமோபோபியா” சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!