அமீரக செய்திகள்

Artificial Intelligence : வெளியில் செல்ல அனுமதி பெறுவோர் அனுமதிக்கப்பட்ட துறையை சார்ந்தவரா என்பதைக் கண்டறிய துபாய் போலீஸின் புதிய முயற்சி..!!

துபாயில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 24 மணி நேர கொரோனா வைரஸிற்கான சுத்திகரிப்பு திட்டத்தின் போது வெளியில் வாகனம் ஓட்டி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கு முன்பு துபாய் காவல்துறை ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) முறையை பயன்படுத்தும் என்று துபாய் காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துபாய் காவல்துறையின் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் (Brigadier Saif Muhair Al Mazroui) கூறுகையில், “ரேடாரால் பதிவு செய்யப்படும் வாகனங்கள் அனுமதி பெற்ற வாகனங்களா என்றும் அந்த வாகனங்கள் முக்கிய துறைகளில் பணிபுரியும் நபர்களுக்கு சொந்தமானதா என்பதையும் அடையாளம் காண ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் (AI) முறை பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு ரேடாரில் இருந்து ஒரு ஃபிளாஷ் (flash) பார்த்தால், உடனடியாக அபராதம் வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம்” என்று அவர் கூறினார். ரேடாரால் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் (AI) முறையை பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்ட துபாய் போலீஸ் சிஸ்டம் (updated dubai police system) மூலமாக பதிவு செய்யப்பட்ட வாகன எண்ணைக் கொண்டு அதன் உரிமையாளர் அரசால் அனுமதிக்கப்பட்ட முக்கிய துறைகளை சார்ந்தவரா இல்லையா என்பதை கண்டறிந்து அதன் பின்னரே அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

துபாயில் இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த சுத்திகரிப்பு பணியின் போது பணி நிமிர்த்தமாகவோ அல்லது அத்தியாவசியத் தேவைக்காகவோ வெளியில் வருபவர்கள் கட்டாயமாக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று காவல்துறை சார்பாக நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ஒரு நபர் அனுமதி பெறாவிட்டாலும், அத்தியாவசிய நோக்கங்களுக்காக வெளியே சென்றாலும் கூட, புதுப்பிக்கப்பட்ட துபாய் போலீஸ் சிஸ்டம் மூலமாக உங்கள் பாதையை அடையாளம் கண்டு, தேவையற்ற விஷயத்திற்காக நீங்கள் வெளியே சென்றீர்களா என்பதை சரிபார்க்க முடியும். அத்தியாவசிய நோக்கங்களுக்காக நீங்கள் சென்றால், புதுப்பிக்கப்பட்ட துபாய் போலீஸ் சிஸ்டம் உங்களுக்கு அபராதம் ஏதும் விதிக்காது,” என்று அவர் கூறினார். “தேவையற்ற விஷயத்திற்கு வெளியே செல்வதன் மூலம் விதிமுறைகளை மீறும் நபரை புதுப்பிக்கப்பட்ட துபாய் போலீஸ் சிஸ்டத்தின் மூலம் அடையாளம் காண முடியும். மேலும் அபராதத்தை தள்ளுபடி செய்ய மக்கள் வாங்கிய ரசீது போன்ற ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

அல் மஸ்ரூய் மேலும் கூறுகையில், “அன்றாட தேவைக்காக ஷாப்பிங் செய்பவர்கள் தேவைக்கு அதிகமாக சேமித்துக்கொள்ளுமாறும் கூறினார். ஒருவர் ஒவ்வொரு நாளும் உணவு மற்றும் இன்ன பிற பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்வது நியாயமற்றது. மக்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான அளவு பொருட்களை ஒரே நேரத்தில் வாங்க வேண்டும், இதன் மூலம் சாலைகளில் மக்களின் நடமாட்டத்தைக் குறைக்க முடியும்” என்று அவர் கூறினார்.

முக்கிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைக்குச் செல்வோராயின், அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் இடத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்றும் இந்த விலக்கை பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. எடுத்துக்காட்டாக, முக்கிய துறைகளில் பணிபுரியும் மக்கள் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லலாம், ஆனால் நண்பர்களைப் பார்க்க முடியாது, என்றார். மேலும் அனுமதிக்கப்பட்ட முக்கியமான துறைகளில் பணிபுரிவோர் அவர்களின் பணி இடங்களுக்கு செல்லும் பாதையை அடையாளம் காணும் திறனை இந்த புதுப்பிக்கப்பட்ட துபாய் போலீஸ் சிஸ்டம் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மக்களிடையேயான தொடர்பைக் குறைப்பதற்கும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற சுத்திகரிப்பு திட்டத்தை ஆதரிப்பதற்காகவும் என்று அல் மஸ்ரூய் கூறினார். இதனால் முன்பு ஒரு பகுதியை சுத்திகரிப்பு செய்ய ஒரு வாரம் தேவைப்பட்ட நிலையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் மூலம் ஒரே நாளில் சுத்திகரிப்பு பணியை விரைவாக முடிக்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!