அமீரக செய்திகள்

விசிட்டில் வந்த இந்தியர் அமீரகத்தில் மரணம்..!!! விமானப் போக்குவரத்து தடையால் நாடு திரும்பும் முன்னரே ஏற்பட்ட சோகம்..!!!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து தற்பொழுது தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், இந்தியாவிலும் கொரோனாவிற்கு எதிராக, நாட்டில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், மற்ற நாடுகளில் இருந்து பல இந்தியர்களும் தங்கள் தாய்நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த பயணத்தடை காரணமாக அமீரகத்திற்கு விசிட்டில் வந்து இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல முடியாமால் அமீரகத்திலேயே தங்கி இருந்த 70 வயது இந்தியர் ஒருவர் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் இறந்துள்ளார்.

பேராசிரியர் எம். ஸ்ரீகுமார் மற்றும் அவரது மனைவி ஸ்ரீகுமாரி ஆகியோர் ஒரு மாதத்திற்கு முன்பு கேரளாவில் உள்ள கொச்சினிலிருந்து அமீரகத்திற்கு ஷார்ஜாவில் இருக்கும் தன் மகளுடன் சிறிது காலம் தங்கி இருக்க விசிட் விசாவில் வந்துள்ளனர். அவர்கள் சனிக்கிழமை கேரளாவுக்கு திரும்பவிருந்த நிலையில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் விமான ரத்து காரணமாக அமீரகத்திலேயே தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஸ்ரீகுமார் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீகுமாரின் உறவினர் சதீஷ்குமார் மேனன் கூறுகையில், “அவரது திடீர் மறைவு இன்னும் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மூன்று வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் நான் அவரைச் சந்தித்தபோது அவர் மனநிறைவோடு இருந்தார். மேலும் அவர் எந்தவொரு உடல்நலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் ஊரடங்கு குறித்து அவர் சற்று வருத்தம் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் ஒரு மாதத்திற்கு மேலாக இங்கு வந்து தங்கியிருந்தார் மற்றும் கேரளாவில் உள்ள தனது சொந்த ஊரான எர்ணாகுளத்திற்கு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் இந்த காலவரையற்ற விமான இடைநீக்கம் அவரை சற்று கவலையடையச் செய்தது. இருப்பினும், அவர் அதை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை” என்று கூறினார்.

மேலும் இவர் கூறுகையில் “வியாழக்கிழமை இரவு ஷார்ஜாவில், ஸ்ரீகுமார் தனது குடும்பத்தினருடன் இரவு உணவருந்திக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நிலையில்லாமல் கீழே விழுந்தார். அதனை தொடர்ந்து, விரைவாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் அந்த இரவு முழுவதும் தொடர்ச்சியான மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். பின், வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்” என்று மேனன் கூறினார்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், மூத்தவர் ஸ்ரீஜா.S ஷார்ஜாவிலும், மற்ற மகள் ஸ்ரீலா.S தனது குடும்பத்தினருடன் எர்ணாகுளத்திலும் தங்கியுள்ளனர்.

மேனன் தொடர்ந்து கூறுகையில், “பல்வேறு அரசு கல்லூரிகளில் பேராசிரியராக தன் கற்பித்தல் பணியை திறம்பட செய்த ஸ்ரீகுமார், எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் புள்ளியியல் பேராசிரியராக (professor of Statistics) இருந்து ஓய்வு பெற்றவர ஆவார். மேலும் முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர் பணியில் ஈடுபட்டு அவர் கற்பித்த நூற்றுக்கணக்கான மாணவர்களால் இவர் மிகவும் விரும்பப்பட்டு மதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்வது முடியாத காரணத்தினால் அவரது உடலுக்கு ஷார்ஜாவிலேயே இறுதி சடங்குகள் நடத்தப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

source : khaleej times

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!