இந்திய செய்திகள்

ஊரடங்கில் சிக்கிய தன் மகனை 1400 கி.மீ ஸ்கூட்டரில் சென்று அழைத்து வந்த தாய்..!! ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்..!!

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட்டது. அவ்வேளையில், தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஒரு தாய் 1400 கி.மீ தொலைவு பயணம் செய்து நண்பன் ஊரில் சிக்கிக் கொண்ட தன் மகனை ஸ்கூட்டரில் தன்னந்தனியாக சென்று அழைத்து வந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தை சேர்ந்த கணவனை இழந்த 48 வயதுடைய ரஜியா பேகம், அங்குள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளன. 15 வருடங்களாக தனி ஆளாக நின்று தன்னுடைய இரு மகன்களையும் நன்கு படிக்க வைத்துள்ளார். இவருடைய மூத்த மகன் இன்ஜினீரிங் படிப்பு முடித்துள்ளார். இரண்டாவது மகன் மருத்துவப் படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில், இவரது இரண்டாவது மகன் தன் நண்பனின் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றதும் தன் நண்பனின் ஊரான ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள ரஹ்மதாபாத் என்ற ஊரிற்கு நண்பனுக்கு துணையாக சென்றுள்ளார்.

இந்த வேளையில்தான் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து தன் சொந்த ஊரிற்கு வர முடியாமல் தன் நண்பனின் வீட்டிலேயே அவர் தங்கியுள்ளார். தன் மகனை அழைத்து வருவதற்கு தாயார் ரஜியாவும் பல வகையில் முயற்சி செய்துள்ளார். எனினும், ஊரடங்கு உத்தரவின் காரணமாக உதவுவதற்கு யாரும் முன் வரவில்லை. தன் மூத்த மகனும் இளவயதுடையவர் என்பதால் காவல்துறையினர் அனுமதிப்பதும் சந்தேகமே. இதனால் செய்வதறியாது தவித்த ரஜியா பேகம் தானே சென்று தன் மகனை அழைத்து வர முடிவு செய்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவின் போது வெளியே செல்வதற்கு அனுமதியில்லை என்பதை அறிந்த ரஜியா பேகம், காவல்துறை துணை ஆணையரிடம் தன் மகனின் நிலையை எடுத்துக் கூறி அவரை அழைத்து வர செல்வதற்கான அனுமதி கடிதத்தை பெற்றுக்கொண்டு கடந்த திங்கள்கிழமை காலையில் ஸ்கூட்டரில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அன்றைய நாள் முழுவதும் பகல், இரவு என தொடர்ச்சியாக பயணித்து மறுநாள் காலையில் தன் மகன் தங்கி இருக்கும் ஊரை சென்றடைந்தார். பின்பு சில மணி நேரங்களில் தன் மகனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிய ரஜியா பேகம், மறுநாள் அதாவது புதன்கிழமை மாலை மகனுடன் தன் வீட்டை அடைந்தார். இந்த மூன்று நாட்களில் அவர் மொத்தம் 1400 கி.மீ ஸ்கூட்டரிலேயே பயணித்துள்ளார். தன் பிள்ளை வேறொரு ஊரில் சிக்கிக்கொண்டு தவிப்பதை தாங்கி கொள்ள முடியாமல் தானே சென்று அழைத்து வந்த அந்த தாயின் செயலைக் கண்டு அனைவரும் நெகிழ்ச்சியடைந்ததுடன் பலரும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி ரஜியா பேகம் கூறிய போது, “1400 கி.மீ ஸ்கூட்டரில் பயணிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என்றும் பாதுகாப்பானது இல்லையென்றும் எனக்கும் நன்கு தெரியும். இருப்பினும், என் மகனை அழைத்து வர இதைத்தவிர எனக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை. நான் சென்ற வழியில் இரவு நேரங்களில் மிகவும் இருட்டாகவும் சில நேரங்களில் காடுகளின் வழியாகவும் பயணம் மேற்கொள்ளும்படி இருந்தது. ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும் செல்லும் வழியெல்லாம் என்னை தடுத்தனர். என்னிடம் இருந்த அனுமதி கடிதத்தை பார்த்தவுடன் என்னை தொடர்ந்து பயணிக்க அனுமதித்தனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் செல்லும் வழிகளில் உணவு கிடைப்பது சிரமம் என்பதை தெரிந்து கொண்டு நான் வீட்டில் இருந்து கிளம்பும் போதே சப்பாத்தி தயார் செய்து என்னுடன் எடுத்து சென்றேன். அதனையே போகின்ற வழியில் பசி எடுக்கும் நேரங்களில் நான் உட்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

சூழ்நிலைகள் எத்தனை கடினமாயினும், தன் பிள்ளைக்கு ஏதேனும் என்றால் ஒரு தாய் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வாள் என்பதற்கு இது ஒரு நல்ல சான்றாக அமைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!