அமீரக செய்திகள்

முஸ்லிம்களின் ரமலான் மாத வணக்க வழிபாடான தராவீஹ் மற்றும் பெருநாள் தொழுகையை மசூதியில் தொழுவதற்கு தடை?? வீட்டிலேயே தொழுது கொள்ள அறிவுறுத்தல்..!!

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பே பெரும் அச்சுறுத்தலாய் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதில் வளைகுடா நாடுகள் ஒன்றும் விதிவிலக்கல்ல. வளைகுடா நாடுகள் அனைத்துமே தற்பொழுது கொரோனவால் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. கொரோனா மேலும் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு, தொலைதூரக் கல்வி, வீட்டில் இருந்தே வேலை, அனைத்து பொழுதுபோக்கு இடங்களும் மூடல், மத வழிபாட்டுத்தலங்கள் மூடல், நாடு முழுவதும் சுத்திகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கொரோனாவின் பாதிப்பு என்னவோ குறைந்தபாடில்லை.

இதனால், தொடர்ந்து அனைத்து நாடுகளின் அரசும் தீவிர கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்த மாத இறுதியில் இஸ்லாமியரின் புனித மாதமான ரமலான் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு வைத்தும், இறைவணக்க வழிபாடுகளில் அதிகமாக ஈடுபட்டு வருவதும் வழக்கம்.

இந்நிலையில், ரமலான் மாதத்தில் தொழக்கூடிய தராவீஹ் தொழுகை மற்றும் பெருநாள் தொழுகை இரண்டையும் மசூதிகளில் அறிவிக்கப்பட்ட தடை நீடிக்கும் பட்சத்தில் வீட்டிலேயே தொழுது கொள்ளுமாறு துபாய் அரசாங்கத்தின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (Islamic Affairs and Charitable Activities Department,IACAD) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

சமீபத்தில் வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் ரமலான் மாதம் இரவு முழுவதும் தொழக்கூடிய “தராவீஹ்” எனும் சிறப்பு தொழுகையையும், பெருநாள் அன்று தொழக்கூடிய சிறப்பு தொழுகையையும் கொரோனா பாதிப்பையொட்டி இந்த வருடம் மசூதிகளில் தொழ முடியாத பட்சத்தில் அவரவர் வீடுகளிலேயே தொழுது கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு அந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டிருந்தது. மசூதிகளில் தொழுவதற்கு பதிலாக, இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களுடைய வீட்டிலேயே தராவீஹ் தொழுகையை தொழுது கொள்ளுமாறு சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகம் (Saudi Ministry of Islamic Affairs) அறிவுறுத்தியிருந்தது.

தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகமும் இரவு நேரங்களில் தொழும் தராவீஹ் தொழுகையையும், 30 நாட்கள் நோன்பு கழித்து தொழக்கூடிய பெருநாள் தொழுகையையும் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள கொரோனாவின் பாதிப்பினால், இஸ்லாமியர்கள் தங்களின் ஐந்து வேளை தொழுகைகளை வீட்டில் தொழுதுகொள்வது போல இந்த தொழுகையையும் வீட்டிலேயே கடைபிடிக்குமாறு அமீரக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமீரக அரசினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

source : Khaleej Times

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!