அமீரக செய்திகள்

அமீரகத்தில் ஊரடங்கை மீறுவோருக்கு கடும் தண்டனை..!! வேலை இழக்க வாய்ப்பு..!! நாடுகடத்தப்படுவர் எனவும் போலீசார் எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரசிற்கான தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் “Stay Home” விதிமுறைகளை கடைபிடிக்காமல் தொடர்ந்து விதிமீறலில் உட்பட்டும் மற்றும் மற்ற நபர்களின் வாழ்வுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயலை தொடர்ந்து செய்யும் நபர்கள் நாடு கடத்தப்படுவது உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“விதிகளை மீறுவது மற்றும் அனுமதி பெற்று அவசியமின்றி தேவையற்ற காரணங்களுக்காக வெளியே செல்வது அல்லது வெளியே செல்வதற்கு அனுமதி பெறாமல் வீடுகளை விட்டு வெளியேறுவது ஆகியவை குற்றங்களாக கருதப்படும் எனவும், அவ்வாறு செயல்படுபவர்கள் இறுதியில் நாடுகடத்த படுவார்கள் என்றும் துபாய் காவல்துறையின் சைபர் குற்றத்துறை தலைவர் கர்னல் சயீத் அல் ஹஜேரி ஆங்கில நாளிதழான கலீஜ் டைம்ஸ் உடன் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

இவர் கூறுகையில், “சமூக விலகல் மற்றும் ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் குறித்த விதிகளை மீறினால், அபராதம் மற்றும் சிறை தண்டனைகள் வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்ட அதிபர் ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும் ஒருவர் செய்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்தால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை முடியும் காலத்தில் அவர் நாடுகடத்தப்படுவார்” என்றும் தெரிவித்துள்ளார்.

விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ‘பெயரிடுதல் மற்றும் அவமானம் செய்தல்’ என்பதன் மூலம் துபாய் காவல்துறையினர் அவர்களை பொதுவெளியில் அடையாளப்படுத்துவார்கள் என்றும் அல் ஹஜேரி கூறினார்.

மேலும் அல் ஹஜேரி கூறுகையில், “விதிமீறல் செய்பவர்களின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுமாறு துபாயின் நெருக்கடி மேலாண்மை குழுவின் (Supreme Committee of Crisis Management) உத்தரவு எங்களிடம் உள்ளது. அவர்களின் புகைப்படங்களை பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் வெளியிடும்படி கேட்கப்படும். இதனால், இது ஒரு சிறிய குற்றம் அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்” என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்ய அனுமதிக்காமல் விதிமீறல்களில் ஈடுபடும் ‘பொறுப்பற்ற குடியிருப்பாளர்கள்’ கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்த அதிகாரி கூறினார். “இன்னும் சிலர் இதனை நகைச்சுவையாக நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களின் பொறுப்பற்ற நடத்தைக்காக, அவர்களின் புகைப்படங்களை சோசியல் மீடியா மற்றும் பத்திரிகைகளில் வெளியிடுவதன் மூலம் தங்களின் நற்பெயரை இழப்பது மற்றும் வேலைகளை இழப்பது போன்ற கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று கர்னல் அல் ஹஜேரி கூறினார்.

இயக்க அனுமதியை தவறாக பயன்படுத்துபவர்கள்

துபாய் காவல்துறையினர் அறிமுகப்படுத்திய இயக்க அனுமதியை குடியிருப்பாளர்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும், அனுமதி இல்லாமல் வெளியே செல்வவர்களுக்கு அவர்களின் எமிரேட்ஸ் ஐடியில் அபராதம் விதிக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

அனுமதியை தவறாகப் பயன்படுத்துபவர்களைப் பிடிக்க எங்களுக்கு பல வழிகள் உள்ளன. ஒரு தெளிவான கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு எங்களிடம் உள்ளது. துபாய் காவல்துறை சிறந்த சைபர் கிரைம் பிரிவை கொண்டுள்ளதும் உங்களுக்கு தெரியும் என்றார்.

மேலும் குடியிருப்பாளர்கள் அதிக பொறுப்புடன் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். இயக்க அனுமதி எடுப்பதில் இருந்து விலக்கு பெற்றவர்கள், தங்கள் நிறுவனத்தின் அனுமதி கடிதத்தை கொண்டு வேலைக்குச் செல்லலாம், ஆனால் அதனை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என்றார். மேலும் மருந்து வாங்குவதற்கோ அல்லது மருத்துவமனை செல்வதற்கோ அனுமதியைப் பெற்று, பின்னர் உங்கள் சகோதரி அல்லது சகோதரரைப் பார்க்க வெளியே செல்வதன் மூலம் நீங்கள் இயக்க கட்டுப்பாட்டு அமைப்பை முட்டாளாக்க முடியாது என்றும் கூறினார்.

சமூக ஊடகங்கள் பயன்படுத்துவது பற்றி

அதிகாரிகளை கேலி செய்யும் வதந்திகள் மற்றும் வீடியோக்களை பரப்புவதற்கு எதிராக மக்களை எச்சரிக்கும் அவர், அதற்கு பதிலாக மக்கள் தங்களுடைய நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

“புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு, மோசடிகளை தவிர்த்து, சமூகத்திற்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் இந்த நேரத்தை பயன்படுத்துமாறு நாங்கள் மக்களை ஊக்குவிக்கின்றோம். இது ஒரு கடினமான நேரம். இது விரைவில் கடந்து போகும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

பலர் சமூக ஊடகங்களை ஒரு சாதகமான கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். மக்கள் சமூக ஊடகங்களை நேர்மறையான செய்திகளுக்காக பயன்படுத்துமாறும் தனிப்பட்ட சுகாதாரம், சமூக விலகல் மற்றும் பின்பற்ற வேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கைகள் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நபர்களை துபாய் காவல்துறை ஊக்குவிப்பதாகவும் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!