தாயகம் திரும்ப விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள் பதிவு செய்ய தமிழக அரசின் சிறப்பு இணையதளம்..!!

கொரோனாவின் பாதிப்பையொட்டி வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களில் தமிழ்நாட்டிற்கு திரும்பி வர விரும்புவோர் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலமாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழகம் திரும்புவதற்கு தமிழக அரசு தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வழிகாட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக முதல்வர், கொரோனாவின் பாதிப்பினால் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களை விமான சேவை மீண்டும் தொடங்கியதற்கு பின் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சியாக தமிழக அரசு www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களில் தாயகத்திற்கு திரும்ப விரும்புவோர் தங்களின் விபரங்களை பதிவிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளவும் அவர்களின் தகவல்களை பெறுவதற்கும் இந்த முயற்சி ஏதுவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவருக்கு தனிமைப்படுத்தல் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.