காலாவதியான விசாக்கள் மற்றும் எமிரேட்ஸ் ஐடியை வங்கி பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம்..!! UAE சென்ட்ரல் பேங்க் அறிவிப்பு..!!
மார்ச் 1, 2020 க்குப் பிறகு காலாவதியான ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களின் அனைத்து விசாக்கள், எமிரேட்ஸ் ஐடிகள் மற்றும் நுழைவு அனுமதிகளை வங்கி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அமீரகத்தின் சென்ட்ரல் பேங்க் தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தின் சென்ட்ரல் பேங்க், இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட அமைச்சரவையின் முடிவுக்கு ஏற்ப, மார்ச் 1, 2020 லிருந்து டிசம்பர் 31, 2020 வரையிலான இடைப்பட்ட காலங்களில் காலாவதியான, அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர்களின் விசாக்கள் மற்றும் எமிரேட்ஸ் ஐடிகள் வங்கி பரிவர்தனைகளுக்கு செல்லுபடியாகும் என்பதை கருத்தில் கொள்ளுமாறு நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அனைத்து வங்கிகளுக்கும் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் வழங்கிய அறிவிப்பின்படி, இந்த முடிவானது அமீரகத்திற்கு வெளியே இருக்கக்கூடிய குடியிருப்பாளர்களுக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நுழைவு அனுமதிகளும் மார்ச் 1, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரையிலும் செல்லும் என்பதால் அதனையும் வங்கிகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இயக்க கட்டுப்பாடு மற்றும் லாக்டவுன் போன்ற நெருக்கடிகளிலிருந்தும் குடியிருப்பாளர்களுக்கு உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 14 ம் தேதி, அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய அதிகாரசபையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் காமிஸ் அல் காபி, மார்ச் 1 க்குப் பிறகு காலாவதியான அனைத்து விசாக்கள் மற்றும் நுழைவு அனுமதிகள் 2020 டிசம்பர் இறுதி வரையிலும் செல்லுபடியாகும் என்றும் இது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வசிப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நுழைவு அனுமதிகளில் சுற்றுலா, வருகை, ட்ரான்சிட் மற்றும் பணி விசாக்கள் ஆகிய அனைத்தும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
source : Khaleej Times