வளைகுடா வாழ் இந்தியர்களை அழைத்துவர 14 கடற்படை கப்பல்கள் தயார்..!! மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பு..!!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இந்தியா அரசாங்கம் முடுக்கி விட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்தியர்கள் பெருமளவில் வசிப்பதால் ஆகாய மார்க்கமாக மட்டுமின்றி கடல் வழியாகவும் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான தீவிர நடவடிக்கைகளை இந்தியா அரசாங்கம் தொடங்கியுள்ளது.
அதனடிப்படையில் தொடங்கப்பட்ட “சமுத்ரா சேது திட்டத்தின்” ஒரு பகுதியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களில் மாலத்தீவிற்கு இரண்டு கப்பல்களும் அமீரகத்திற்கு ஒரு கப்பலும் கடந்த மே 5 ஆம் தேதி, இந்திய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் மாலத்தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கப்பல்கள் மாலத்தீவின் தலைநகரான மாலியை அடைந்து விட்டதாகவும், முதற்கட்டமாக அங்கு சிக்கி இருக்கும் இந்தியர்களில் 1000 நபர்களை அழைத்துக்கொண்டு நாளை மே 8 ஆம் தேதி அன்று கொச்சி துறைமுகத்தை நோக்கி புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியர்கள் பெருமளவில் வசிக்கும் வளைகுடா நாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் குடிமக்களை விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கை இன்று தொடங்கியிருக்கும் நிலையில், சுமார் 5 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் இந்தியா திரும்ப விண்ணப்பித்திருப்பதால், அவர்கள் அனைவரையும் அழைத்து வருவதற்காக இந்திய கடற்படையை சார்ந்த 14 கப்பல்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் தனது பயணத்தை தொடங்கும் என்றும் இந்திய கடற்படையை சார்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் ஒரு கப்பல் துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மே 5 ஆம் தேதி அதிகாலையில் புறப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கப்பல்களில் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்திற்குரிய பயணிகளை கையாள்வதற்கு ஏதுவாக சமூக இடைவெளி மற்றும் சுத்திகரிப்பு போன்ற நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதிகளவில் பயணிகளை அழைத்து வரும் வண்ணம், கப்பலில் இருக்கக்கூடிய அத்தியாவசியமற்ற உபகரணங்களை அகற்றியுள்ளதாகவும் இந்திய கடற்படை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு கடற்படைக்கு சொந்தமான INS ஷார்தூலும், துபாயில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து குறிப்பாக, 2006 ஆம் ஆண்டு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சுகூன் (Operation Sukoon) மற்றும் 2015 ஆம் ஆண்டு ஏமனில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் ரஹத் (Operation Rahat) ஆகியவற்றின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படை முந்தைய சந்தர்ப்பங்களிலும் இதேபோன்ற இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு முன்னர், 1990 ல் ஈராக்கிற்கும் குவைத்துக்கும் இடையிலான முதல் வளைகுடா போரின் (Gulf war) போது, அங்கிருந்த சுமார் 150,000 நபர்களை இந்திய கடற்படை தாயகம் அழைத்து வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.