‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் ஓமானிலிருந்து இந்தியா செல்பவர்களுக்கு தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்..!!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட விமான போக்குவரத்து தடையின் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரும் ‘வந்தே பாரத்’ எனும் மெகா திட்டத்தை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் முதல் வாரத்திற்கான விரிவான விமான பயண திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி, வரும் மே 12 ஆம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானம், ஓமான் நாட்டிலிருக்கும் இந்தியர்களை அழைத்து கொண்டு தமிழகத்தின் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடையுவுள்ளது.
இதனையொட்டி, ஓமானில் இருந்து தாயகம் செல்லவிருக்கும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக அவர்கள் அனைவருக்கும் கொரோனாவிற்கான உடல் வெப்ப சோதனை செய்யப்படும் என்று ஓமானிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஓமான் நாட்டிற்கான இந்திய தூதர் கூறுகையில், “விமானத்தில் பயணிக்கக்கூடிய பயணிகள் அனைவருக்கும் கொரோனாவிற்கான சோதனை மேற்கொள்ளப்படும். அதில் கொரோனாவிற்கான அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். கொரோனாவிற்காக முன் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தவில்லை. விமான நிலையத்தில் பயணிகளுக்கு நாங்கள் உடல் வெப்ப பரிசோதனையை மேற்கொள்வோம். இருப்பினும், வேறு ஏதேனும் நெறிமுறைகளை ஓமான் அரசாங்கம் மேற்கொள்வதாக இருந்தால், நிச்சயமாக அதுவும் கடைபிடிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
“நாங்கள் முக்கியத்துவம் அளிப்பது பயணிகளுக்கான உடல் வெப்ப பரிசோதனையை மட்டுமே. அதில், கொரோனாவிற்கான அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சிறப்பு விமானங்களில் கடைபிடிக்கப்படும் நடவடிக்கைகளை பற்றி அவர் கூறியதாவது, “விமானங்களில் நிச்சயம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நான் நம்புகிறேன், ஆனால் அது தொடர்பான நெறிமுறைகளை விமான நிறுவனங்கள் உறுதி செய்யும். மேலும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவார்கள். அதன்படி விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஆலோசனை கூறுவார்கள்” என்றார்.
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவை கடைபிடிக்கப்படும் எனவும், மேலும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு சானிடைசர்கள் வழங்கப்படும் எனவும் தூதரகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானிலிருந்து இந்தியர்களை அழைத்து செல்லும் முதல் விமானம் நாளை மே 9 ஆம் தேதி மஸ்கட்டிலிருந்து கொச்சிக்கும், அடுத்த விமானம் மூன்று நாட்கள் கழித்து மே 12 ஆம் தேதி சென்னைக்கும் புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.