சவூதி அரேபியாவில் பாஸ்போர்ட் சேவைகளை மீண்டும் தொடங்கிய இந்திய தூதரகங்கள்..!! முன் அனுமதி பெறுவது கட்டாயம் என அறிவிப்பு..!!
சவூதி அரேபியாவில் இருக்கும் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகிய இரண்டு தூதரகங்களும் வரும் மே 5 ஆம் தேதி முதல் காலாவதியான பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் கொரோனாவின் பாதிப்பையொட்டி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்பொழுது ஓரளவு தளர்த்தப்பட்ட போதிலும் VFS குளோபல் நடத்தும் இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா விண்ணப்ப மையங்களை மீண்டும் திறக்க முடியாத காரணத்தினால், இந்த முறை செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணைத்தூதரகம் இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஸ்போர்ட் சம்பந்தமான அவசர சேவைகள் தேவைப்படும் இந்தியர்களுக்கு இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும் என்றும், கொரோனாவிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டே இந்த சேவைகளானது செயல்படும் என்றும் அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக, காலாவதியான அல்லது ஜூன் 30 ம் தேதிக்கு முன்னர் காலாவதியாக கூடிய பாஸ்போர்ட் தொடர்பான விண்ணப்பங்களுக்குண்டான முன் அனுமதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக விண்ணப்பிக்க கூடியவர்கள், தங்களுடைய அவசர கால நிலையை விளக்கி தங்களின் ஆவணங்களையும் முறையாக இணைத்து இந்திய தூதரகத்திற்கு [email protected] என்ற முகவரியிலோ அல்லது துணைத்தூதரகத்திற்கு [email protected] என்ற முகவரியிலோ மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, பாஸ்போர்ட் மற்றும் பிற பாஸ்போர்ட் தொடர்பான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கு முன் அனுமதி அதாவது அப்பொய்ண்ட்மென்ட் பெற்றுக்கொள்வது கட்டாயம் என்றும் அவ்வாறு முன் அனுமதியின்றி வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளுக்கான அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழன் வரை, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரங்களில் கால் சென்டரை (தொலைபேசி எண் 920006139) தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரியாத்தில் உள்ள தூதரகத்திற்கோ [email protected] அல்லது ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகத்திற்கோ [email protected] மின்னஞ்சல் அனுப்பி அப்பாயிண்ட்மெண்ட் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeகால் சென்டர் வரும் மே 4 ம் தேதி திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கும் என்றும், தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்திற்கு சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அல்லது பெறுவதற்கான நேரம் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழன் வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உறுதிப்படுத்தப்பட்ட நியமனம் உள்ள விண்ணப்பதாரர் மட்டுமே தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்திற்கு வருகை தர வேண்டும் என்றும் விண்ணப்பதாரரைத் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. உள்ளே வரும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் மற்றும் விசா விண்ணப்ப மையங்களைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக இந்த புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பாஸ்போர்ட் சேவை மையங்களை மீண்டும் திறக்க சவுதி அரேபிய அதிகாரிகளுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Embassy notice regarding passport related services pic.twitter.com/XdDduiaAwL
— India in SaudiArabia (@IndianEmbRiyadh) May 1, 2020
Public Notice regarding partial resumption of Consular services at CGI Jeddah w.e.f. 05 May 2020. pic.twitter.com/1LMYFJFCe1
— India in Jeddah (@CGIJeddah) April 30, 2020