துபாயில் ஜூமைரா பீச் நடைபாதை, 70 பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுவதாக அறிவிப்பு..!!
துபாய் நகராட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 17) வெளியிட்ட அறிவிப்பின்படி, துபாயில் உள்ள ஜுமைரா கடற்கரை நடைப்பாதையை (Jumeirah beach walk) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “துபாய் நகராட்சி ஜுமைரா கடற்கரை நடைப்பயணத்தை மீண்டும் திறப்பதாக அறிவிக்கிறது. மேலும் அங்கு வரும் குடியிருப்பாளர்கள் அனைவரும் கொரோனாவிற்கான தனிப்பட்ட பாதுகாப்பு பொருட்களை பயன்படுத்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் நினைவூட்டுகிறது” என்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை சமீப காலங்களில் தளர்த்தி வருவதையொட்டி தற்பொழுது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, துபாயில் உள்ள பொது பூங்காக்கள் மூன்று கட்டங்களாக மீண்டும் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் முதல் கட்டமாக, மே 12 அன்று வெளிப்புற தடங்கள் (external tracks) மற்றும் 72 குடும்ப சதுரமைப்புகள் (family squares) ஆகியவை மீண்டும் தொடங்கப்பட்டது.
இரண்டாவது கட்டமாக மே 18 அன்று 70 பூங்காக்கள் திறக்கப்பட உள்ளன. மூன்றாம் கட்மாக மே 25 ஆம் தேதி முஷ்ரிஃப், அல் மம்சார், அல் கோர், ஜபீல் மற்றும் அல் சஃபா ஆகிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
#DubaiMunicipality announces the reopening of Jumeirah beach walk and reminds citizens and residents of the need to follow all necessary precautions, by using personal protection and keeping a social distance. #TogetherWeCan pic.twitter.com/sjDsSRBb3F
— بلدية دبي | Dubai Municipality (@DMunicipality) May 17, 2020