துபாய் : நாளை முதல் சினிமா, ஜிம் உட்பட மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள துறைகளின் பட்டியல்..!!
துபாயில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு தளங்கள் நாளை (மே 27) முதல் மீண்டும் திறக்கப்படுவதாக நேற்று ஷேக் ஹம்தான் தலைமையில் நடைபெற்ற விர்ச்சுவல் கூட்டத்தை தொடர்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன் படி சினிமா, ஜிம், குழந்தை பயிற்சி நிலையங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் உட்பட பெரும்பாலான துறைகள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் அந்த அறிவிப்பின் படி, மேற்கண்ட நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்திருக்கலாம் எனவும், இந்த நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு எந்த தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கொரோனாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட வழிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது எந்தெந்த துறைகள் நாளை முதல் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதை குறித்த விரிவான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை கீழே காணலாம்.
- சமூக இடைவெளி மற்றும் 24 மணி நேர சுத்திகரிப்புடன் சினிமா அரங்குகள்
- துபாய் மால் ஐஸ் ரிங்க் (Dubai Mall Ice Rink) மற்றும் துபாய் டால்பினேரியம் (Dubai Dolphinarium) போன்ற பொழுதுபோக்கு இடங்கள்
- விளையாட்டு அகாடமிகள், உட்புற ஜிம்கள் (indoor gyms), உடற்பயிற்சி மற்றும் சுகாதார கிளப்புகள் (fitness and health clubs)
- சில்லறை கடைகள் (Retail shop) மற்றும் மொத்த விற்பனை கடைகள் (wholesale stores)
- விமான நிலையம் (அமீரக குடியிருப்பாளர்கள் நாடு திரும்புவதற்கும், அமீரகம் வழியாக பிற நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கும் செயல்படும்)
- ENT எனப்படும் காது மூக்கு தொண்டை மருத்துவம் உள்ளிட்ட கிளினிக்குகள் (இரண்டரை மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளும் அடங்கும்)
- கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் (Academic and coaching institutes), குழந்தைகள் பயிற்சி மற்றும் சிகிச்சை மையங்கள் (therapy centres).
- அமர் (Amer Service) போன்ற அனைத்து அரசு சேவை மையங்கள்
மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள துறைகள் பின்பற்ற வேண்டிய விதிகள்
- 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் ஷாப்பிங் சென்டர்கள், சினிமாக்கள், ஜிம்கள் போன்ற இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.
- அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வணிகங்களும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலான புதிய நேர கட்டுப்பாட்டிற்கு கட்டுப்பட வேண்டும்.
- பொது வெளியில் நடமாடும் அனைவரும் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- ஒருவருக்கு ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- அமீரகத்திற்கு திரும்பி வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் 14 நாள் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும்
- ஸ்டெர்லைலேஷன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் உபகரணங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும்.