அமீரக செய்திகள்

துபாயில் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்க அனுமதி .!! இயக்க கட்டுப்பாடு தளர்வு..!!

துபாயில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தேசிய சுத்திகரிப்பு திட்டம் போன்றவற்றின் காரணமாக வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நேர கட்டுப்பாடுகள் ஈத் விடுமுறைக்கு பிறகு மாற்றி அமைக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, வரும் மே 27 புதன்கிழமை முதல் துபாய் முழுவதிலும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயின் மகுட இளவரசர் மற்றும் செயற்குழுவின் தலைவரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவின் விர்ச்சுவல் கூட்டத்தைத் தொடர்ந்து, வணிக நடவடிக்கைகளை மீண்டும் திறப்பதற்கான இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விர்ச்சுவல் கூட்டத்தில் துபாயின் துணை ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவர் ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், மற்றும் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்ததும், காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு எந்த தடையும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் சமூக பொருளாதார அம்சங்கள் மற்றும் கொரோனாவின் தற்போதய நிலைமை பற்றிய முழுமையான மதிப்பீட்டை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச வழிகாட்டுதல்களும் இந்த முடிவு எடுப்பதற்கு முன்பு கவனத்தில் கொள்ளப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடவடிக்கைகள், முக்கிய துறைகளின் செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்காத வண்ணம், கொரோனாவின் தற்போதய நிலைமைக்கு ஏற்ப இயக்க கட்டுப்பாடுகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதே சமயம் முக கவசம் அணிவது, இரண்டு மீட்டர் குறைந்தபட்ச சமூக இடைவெளியை பின்பற்றுவது, சானிடிசர்களைப் பயன்படுத்துவது மற்றும் சோப்பு மற்றும் தண்ணீருடன் 20 விநாடிகள் கை கழுவுவது உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷேக் ஹம்தான் அந்த கூட்டத்தில், கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துபாய் அதிகாரிகள் பொதுமக்களிடம் மேலும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும், துபாய் ஆட்சியாளர் மாண்பு மிகு ஷேக் முகமது அவர்கள் கூறியபடி “அனைவரும் பொறுப்புடையவர்கள்” என்ற கூற்றை எடுத்துரைத்து, தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை சமூக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் சமூக மக்களின் சாதாரண வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு அரசு கூறும் வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிப்பது முக்கியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா தொற்றுநோயின் விளைவுகள் காரணமாக பல துறைகள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை நாங்கள் அறிவோம். எந்தவொரு நெருக்கடிகளையும் சவால்களையும் ஐக்கிய அரபு அமீரக சமூகம் எதிர்கொள்ளும். உலகெங்கிலும் உள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம். மாற்றங்களை நேர்மறையாகக் கையாளும் திறன் மற்றும் நமது சுறுசுறுப்பு ஆகியவை நம்மை மற்ற நாடுகளிலிருந்து வேறுபடுத்துகின்றன. இந்த சவாலான சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேவையான அனைத்து கூறுகளும் எங்களிடம் உள்ளன. இந்த நெருக்கடியை விரைவில் சமாளிக்க சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்று சேருவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றும் ஷேக் ஹம்தான் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!