ஓமானில் அரசு துறையில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் வேலை இழக்கும் அபாயம்..!! ஓமானியர்களை பணியமர்த்த முடிவு..!!

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமான் நாட்டில், அந்நாட்டு குடிமக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு, அந்நாட்டிலுள்ள அரசு துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களை குறிப்பாக சீனியர் பதவியில் இருப்பவர்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஓமான் நாட்டு குடிமக்களை பணியில் அமர்த்துமாறு அந்நாட்டின் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
அரசு நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் பதவியில் (மேலாளர் பதவி உட்பட) ஓமான் நாட்டின் குடிமக்களை பணியமர்த்துவதற்கான கால அட்டவணையை வரும் ஜூலை மாதம் 21 ம் தேதிக்குள் தயார் செய்யுமாறும் நிதியமைச்சகம் அரசு நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இன்றளவும் ஓமான் நாட்டின் அரசு துறை சார்ந்த நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் நிர்வாக பதவிகளை வகித்து வருவதாக அந்நாட்டின் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓமானின் மக்கள் தொகையில் 4.6 மில்லியனில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டினர்கள் ஆகும். இவர்கள் பல வருடங்களாக ஓமான் அரசின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 25 மில்லியன் வெளிநாட்டினர், குறிப்பாக பெரும்பாலும் ஆசியாவை சேர்ந்த வெளிநாட்டவர்கள், வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். ஆனால் 2014 முதல் ஏற்பட்ட கச்சா விலை வீழ்ச்சியால் வளைகுடா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும், சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வளைகுடா நாடுகள் மட்டுமல்லாது உலக வர்த்தக சந்தையிலும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார சரிவு மற்றும் கச்சா எண்ணெய் வருவாயின் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள ஓமான் மற்றும் பிற வளைகுடா நாடுகள் (GCC) தங்கள் சொந்த நாட்டு குடிமக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க கடுமையாக முயற்சித்து வருகின்றன.
ஓமான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகள் தங்கள் பொருளாதாரங்களை பன்முகப்படுத்தவும், மில்லியன் கணக்கான புதிய பட்டதாரிகளை தொழிலாளர் தொகுப்பில் ஒருங்கிணைக்கவும் முயற்சி செய்து வருகின்றன.
மேலும், இந்த நாடுகள் அனைத்தும் பொது மற்றும் தனியார் துறைகளில் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.