அமீரக செய்திகள்

தாயகம் திரும்பும் பயணிகளுக்கு அமீரக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள்..!! சிறு பார்வை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய இந்தியர்களில் தாயகம் திரும்ப விருப்பம் உள்ளவர்கள் தங்களின் விபரம் மற்றும் தாயகம் செல்வதற்கான காரணத்தை குறிப்பிட்டு பதிவு செய்துகொள்ளுமாறு அமீரகத்திற்கான இந்திய தூதரகம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. இதற்காக ஒரு பிரத்யேக இணையதளம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருந்தது. அதன்படி, தாயகம் திரும்ப விண்ணப்பித்தவர்களின் விபரங்களை பட்டியலிட்டு, அதனடிப்படையில் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை, இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய சிவில் விமான போக்குவரத்துக்கு அமைச்சகத்துடன் இணைந்து இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது.

“வந்தே பாரத் (Vande Bharat Mission)” எனப்படும் இந்த திருப்பி அனுப்பும் திட்டத்தின் முதல் வாரத்திற்கான பட்டியலை இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் வெளியிட்டிருந்தது, அதனடிப்படையில், முதல் வார திட்டத்தின் முதல் நாளான இன்று அமீரகத்திலிருந்து விண்ணப்பித்த பயணிகளை ஏற்றிக்கொண்டு இரண்டு விமானங்கள் இந்தியா செல்கின்றது. அதில் ஒன்று அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்திற்கும், மற்றுமொரு விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கும் செல்கின்றது. இந்த திட்டத்தின் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு இரண்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திற்கு செல்ல கூடிய சிறப்பு விமானங்கள் பற்றிய முழு விபரம்..

இந்த நடவடிக்கையில் முதற்கட்டமாக கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், வேலை இழந்த தொழிலாளர்கள், விசா காலம் முடிந்தவர்கள், மாணவர்கள், தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட மரணத்தின் காரணமாக நாடு செல்ல முற்படுபவர்கள் என ஒவ்வொன்றாக பட்டியலிட்டு அவர்களின் அவசர தேவையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு கட்டமாக தாயகம் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தயார் செய்த பட்டியலின் அடிப்படையில் தாயகம் திரும்ப இந்திய தூதரகத்தால் உறுதிப்படுத்தப்படுவதிலிருந்து இந்தியா சென்றடையும் வரை என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதை கீழே காண்போம்.

  • தாயகம் செல்வதற்காக பதிவு செய்த உங்களின் விண்ணப்பம் இந்திய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்டால் பயண தேதி, நேரம் தொடர்பான தகவல் SMS மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தூதரகத்தின் சார்பாக உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
  • பயண தேதி மற்றும் நேரம் தொடர்பான தகவல் பெறப்பட்டவர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகங்கள் சென்று கட்டணம் செலுத்தி தங்களின் விமான டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • பயணம் மேற்கொள்பவர்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு 5 மணி நேரங்களுக்கு முன்பாகவே, அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் விமான நிலையத்தை வந்தடைய வேண்டும்.
  • விமான நிலையம் வரும் பயணிகள் அனைவரும் உடல் வெப்ப சோதனைக்கு பிறகே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
  • விமான நிலையத்தில் பயணிகள் அமருவதற்காக சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் போடப்பட்டிருக்கும்.
  • பயணம் மேற்கொள்ள ஒரு விமானத்தில் 177 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
  • பயணிகள் அனைவரும் IGM/IGG எனப்படும் கொரோனா பரிசோதனைக்கு கட்டாயம் உட்படுத்தப்படுவார்கள். ஒரு துளி இரத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த IGM/IGG சோதையின் முடிவு 10 முதல் 15 நிமிடங்களில் கண்டறியப்படும்.
  • IGM/IGG என்ற சோதனையின் இறுதியில் கொரோனாவிற்கான அறிகுறி இல்லாதவர்களின் பாஸ்போர்ட்டில் ‘OK to Board’ எனும் ஸ்டிக்கர் அமீரக சுகாதார அதிகாரிகளால் ஒட்டப்படும். எவருக்கேனும் கொரோனாவிற்கான அறிகுறிகள் தென்பட்டால், அவர் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்.
  • உறுதிப்படுத்தப்பட்ட 177 பயணிகளில் எவரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு பதிலாக காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளிலிருந்து எவரேனும் செல்ல அனுமதிக்கப்படுவர்.
  • இறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம், கையுறைகள் மற்றும் சானிடைசர்கள் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும்.
  • பயணிகள் அனைவரும் விமான இருக்கைகளில் அமர்ந்திருக்கும்போது முகக்கவசம் மற்றும் கையுறைகள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
  • விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் PPE Suit எனப்படும் உடல் முழுவதும் மறைக்கக்கூடிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பர்.
  • விமானத்தின் கடைசி 9 இருக்கைகள் கொரோனாவிற்கான ஐசோலேஷன் வசதிக்காக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும். அதில் பயணிகள் அமர அனுமதிக்கப்படமாட்டர்.

இறுதியாக, பயணம் மேற்கொள்பவர்கள் இந்தியாவில் தங்களின் சொந்த மாநிலங்களை அடைந்த பின்னர், இந்திய சுகாதார அமைச்சகத்தால் நெறிப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தங்களின் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகள் பற்றிய முழு விபரம்.

தாயகம் செல்ல விரும்புபவர்கள் பதிவு செய்ய வேண்டிய இணையதளங்கள்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!