வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை பல கட்டங்களாக அழைத்து செல்லும் நடவடிக்கை மே 7 முதல் தொடங்கும்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் கட்டாய அடிப்படையில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை பல்வேறு கட்டங்களாக இந்திய அரசாங்கம் செய்யும் என இன்று திங்கள்கிழமை (மே 4,2020) இந்திய அரசின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விமானம் மற்றும் கடற்படைக் கப்பல்கள் மூலம் பயணம் ஏற்பாடு செய்யப்படும். இது தொடர்பாக ‘நிலையான இயக்க நெறிமுறை (Standard Operating Protocol – SOP)’ தயாரிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “இந்திய தூதரகங்கள் மற்றும் உயர் கமிஷன்கள் தாயகம் திரும்ப முடியாமல் மன அழுத்தத்தில் இருக்கும் இந்திய குடிமக்களின் பட்டியலைத் தயாரிக்கின்றன. இந்திய நாட்டிற்கு அழைத்து செல்ல கூடிய இந்த நடவடிக்கை கட்டண அடிப்படையில் கிடைக்கும். இந்த நடவடிக்கைக்கு சிறப்பு பயணிகள் விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும். பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந்த பயண நடவடிக்கை மே 7 ஆம் தேதி முதல் தொடங்கும்” எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“விமான பயணத்திற்கு அனுமதிப்பதற்கு முன் பயணிகளுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யப்படும். கொரோனாவிற்கான அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பயணத்தின் போது, சுகாதார அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் கூறப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகளை பயணிகள் அனைவரும் பின்பற்றவேண்டும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்தியாவை அடைந்ததும் பயணிகள் அனைவரும் கொரோனாவிற்காக மதிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆரோக்யா சேது (Arogya Setu app)’ எனும் மொபைல் அப்ளிகேஷனில் பதிவு செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு (Medical Screening) உட்படுத்தப்படுவார்கள். பரிசோதனைக்கு பிறகு, பயணிகள் அனைவரும் மருத்துவமனையிலோ அல்லது பணம் செலுத்தும் அடிப்படையில் ஏதேனும் ஒரு நிறுவனதின் தனிமைப்படுத்தல் மையத்திலோ 14 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசால் தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனாவிற்கான மறு பரிசோதனை 14 நாட்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும். பரிசோதனை முடிவின் அடிப்படையில், சுகாதார நெறிமுறைகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகங்கள் விரைவில் இது குறித்த விரிவான தகவல்களை தங்கள் வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Government of India to facilitate return of Indian Nationals stranded abroad https://t.co/FbJCX7NhrV
— India in Dubai (@cgidubai) May 4, 2020
வெளிநாடுகளிலிருந்து தங்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்பி வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் அதனை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.