கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க இரண்டாம் கட்டமாக அமீரகம் வந்தடைந்த இந்திய மருத்துவக் குழு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து 105 சுகாதார வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்று அபுதாபியை வந்தடைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை சார்ந்த VPS சுகாதார நிறுவனம் (VPS Healthcare) சிக்கலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழுவை புதன்கிழமை (இன்று) காலை சிறப்பு விமானத்தின் மூலமாக வரவழைத்துள்ளது.
எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) EY 281 என்ற சிறப்பு விமானம் மூலம் கொச்சியில் இருந்து காலை 6.54 மணிக்கு அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய மருத்துவக்குழுவானது இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக தேசியக்கொடியை கையில் பிடித்த வண்ணம் சரவதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த சுகாதார வல்லுநர்கள் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளின் கொரோனாவிற்கான முக்கியமான பராமரிப்பு பிரிவில் பணியாற்றுவர் என்று கூறப்பட்டுள்ளது.
இதே போல், கடந்த வாரம் முதல் கட்டமாக 88 சுகாதார ஊழியர்கள் அடங்கிய மருத்துவக்குழுவானது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் அமீரகத்தை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இரண்டாம் கட்டமாக 105 பேரை உள்ளடக்கிய மருத்துவக்குழுவானது அமீரகத்தை வந்தடைந்துள்ளது. இந்த முயற்சிக்கு இந்திய தூதரகம், அபுதாபி சுகாதாரத் துறை மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் ஆகியவை உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர் கூறுகையில், இத்தகைய முயற்சிகள் நீண்டகால மற்றும் வலுவான இரு நாடுகளின் உறவுகளின் பிரதிபலிப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வந்தவர்களில் 75 பேர் புதிய மருத்துவர்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் விடுமுறைக்காக இந்தியா சென்ற VPS ஹெல்த்கேரின் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து VPS ஹெல்த்கேர் குழுமத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் நபில் டெபவுனி கூறுகையில், “விரிவான பயிற்சி பெற்ற மற்றும் சிக்கலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் ஆகியோர் ஒன்றினையும் போது கொரோனாவிற்கெதிரான போராட்டத்தை பலப்படுத்தும்” என்று கூறியுள்ளார்
“நாங்கள் இதுவரை உலகம் கண்டிராத சிக்கலான சூழ்நிலையை எதிர்த்துப் போராடுகிறோம். ஐக்கிய அரபு அமீரகம் வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியில் நாங்களும் ஒரு பகுதியாக இருந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், அரசாங்கத்தை ஆதரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் தற்பொழுது மருத்துவக் குழுவை அமீரகத்திற்கு வரவழைத்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் கூறுகையில், “இது எங்கள் பொறுப்பு மற்றும் கடமை. மருத்துவக் குழுவை அபுதாபிக்கு அழைத்து வருவதற்கு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி கூறுகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்பொழுது அமீரகத்திற்கு வந்தடைந்த மருத்துவக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்பு கொச்சியில் அவர்கள் அனைவரும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி அமீரகத்திற்கு வந்தடைந்த மருத்துவக் குழுவின் மூத்த செவிலியர்களில் ஒருவரான வினோத் செபாஸ்டியன் கூறுகையில், எங்கள் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம் என்று கூறியுள்ளார்.
“உலகம் இதுவரை கண்டிராத இந்த சிக்கலான சூழ்நிலையின் போது நோயாளிகளுக்கு சேவை செய்வதும் சிகிச்சையளிப்பதும் எங்கள் கடமையாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.