‘UAE உங்களின் இரண்டாவது வீடு’..!! அமீரத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு அபுதாபி மகுட இளவரசரின் செய்தி..!!
ஐக்கிய அரவு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் மகுட இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை தங்களின் இரண்டாவது வீடாக உணரவும், எடுத்துக்கொள்ளவும் கூறியுள்ளார். மேலும் “இந்த கோவிட் -19 நெருக்கடி கடந்து செல்லும்” என்றும் அவர் தேசத்திற்கு உறுதியளித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை தொடங்கப்பட்ட மஜ்லிஸ் முஹம்மது பின் சயீத் விரிவுரைத் தொடரின் ஒரு பகுதியாக நேரடி விர்சுவல் கலந்துரையாடலின் போது பேசிய மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள், “இது சவால்களை எதிர்கொள்ளும் பொறுமை மற்றும் நீடித்த கஷ்டங்களின் ஒரு மாதமாகும். எங்கள் இலக்குகளை அடைவதில் உறுதியுடனும் விருப்பத்துடனும் செயல்பட நம்மை ஊக்குவிக்கும் மாதம். மனிதகுலத்தின் நலனுக்கான ஒரு மாதம்” என அவர் கூறியுள்ளார்.
மேலும் “மக்களின் நலனுக்காகவும், அவர்களின் முகத்தில் புன்னகையை விதைக்கவும் நாம் முதலீடு செய்ய வேண்டும். உலகெங்கிலும் பரவியிருக்கும் மற்றும் பல நாடுகளை சீர்குலைத்திருக்கும் இந்த கொரோனா தொற்றின் பாதிப்புகளுக்கு நடுவே, அமீரக மண்ணில் வசிக்கும் அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களாகிய அனைத்து மக்களுக்கும் இந்த செய்தியை அனுப்ப விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.
“ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியிருப்பாளர்கள், அமீரகத்தை அவர்களின் இரண்டாவது வீடு போன்று உணர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியதுடன், தனிப்பட்ட முறையில் நானும் விரும்புகிறேன்” என்றும் அபுதாபியின் மகுட இளவரசர் மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் சயீத் அவர்கள் கூறியுள்ளார்.
“குடியிருப்பாளர்கள் அவர்களின் முதல் வீட்டில் இருப்பது போன்ற உணர்வுக்கு நாங்கள் ஈடுசெய்ய முடியாது. ஆனால் இது அவர்களின் இரண்டாவது வீடு. கடவுள் விரும்பினால் இந்த நெருக்கடியும் கடந்து செல்லும். அது வரை நாம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவிற்கு எதிரான போரில் முன்னணியில் இருப்பவர்களுக்கு நன்றி
ஐக்கிய அரபு அமீரக மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக முன்னணியில் பணியாற்றும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். மேலும் ஒட்டுமொத்த தேசமும் அவர்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறது என்பதையும் வலியுறுத்தினார்.
“இந்த நாட்டிற்கு கொடுப்பதிலும், இந்நாட்டின் மீது அவர்கள் காட்டும் அன்பிலும் நாங்கள் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இடையில் வேறுபாடு காட்டுவதில்லை. கடவுள் விருப்பத்துடனும் பொறுமையுடனும் இந்த நெருக்கடியை கடப்போம். ஐக்கிய அரபு அமீரகம், அதன் அனைத்து மக்களுடன் இணைந்து வலுவாக உள்ளது, ”என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.