KSA: 2020 க்குள் 1.2 மில்லியன் வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடும்..!! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட JIC..!!
சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்களில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 1.2 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என சவூதி அரேபியாவை சார்ந்த ஜத்வா முதலீட்டு நிறுவனம் (Jadwa Investment Company – JIC) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார காப்பீட்டு தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்ட கணக்கெடுப்பில், 2020 ஆம் ஆண்டில் இதுவரையிலும் 300,000 வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும் ஜத்வா முதலீட்டு நிறுவனத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் கொரோனாவின் காரணமாக ஏற்பட்ட வேலையிழப்பு போன்ற காரணங்களால், ஏப்ரல் 22 முதல் ஜூன் 3 வரையிலான இடைப்பட்ட காலங்களில் மட்டும் தாய் நாட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்து மொத்தம் 178,000 விண்ணப்பங்கள் வெளிநாட்டவர்களிடம் இருந்து அவ்தாவுக்கு (awdah) அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘அவ்தா’ என்பது வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல விண்ணப்பிப்பதற்காக வேண்டி உள்துறை அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் அப்ளிகேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அறிக்கையின்படி, 2019 ம் ஆண்டில் 445,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி தொழிலாளர் சந்தையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் பொழுதுபோக்கு துறையுடன் கூடுதலாக போக்குவரத்து, மொத்த மற்றும் சில்லறை விற்பனை, ஹோட்டல் மற்றும் உணவகங்கள் மற்றும் எண்ணெய் அல்லாத உற்பத்தி போன்ற துறைகளும் மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பின் காரணமாக பாதிப்புக்குள்ளான பல நிறுவனங்கள் மூடல் மற்றும் வெளிநாட்டவர்கள் வேலை இழப்பு போன்றவை சவூதி அரேபியா மட்டும் அல்லாது மற்ற வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஓமான், பஹ்ரைன் போன்ற நாடுகளிலும் எதிரொலித்துள்ளன. கொரோனா மற்றும் கச்சா எண்ணெய் வீழ்ச்சி போன்றவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஈடுசெய்ய ஓமான் அரசாங்கம் மற்ற வளைகுடா நாடுகளின் உதவியை நாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.