சவூதி அரேபியா : ஒரே நாளில் 5,000 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு..!! 140,000 ஐ கடந்த மொத்த எண்ணிக்கை..!!
வளைகுடா நாடுகளிலேயே சவூதி அரேபியா நாடானது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகும். அந்நாட்டில் கொரோனாவிற்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் வைரஸின் பாதிப்பு குறைந்தபாடில்லை.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் சவூதி அரேபியாவில் 4,919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் கொரோனா பரவ ஆரம்பித்த நாளிலிருந்து எண்ணிக்கையை ஒப்பிடும் போது இதுவே மிக அதிக எண்ணிக்கையாகும். இதனால் அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 141,234 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று ஒரு நாளில் மட்டுமே 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,091 ஆக அதிகரித்துள்ளது.
அந்நாட்டிலேயே அதிகபட்சமாக சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் இன்று ஒரு நாளில் மட்டுமே 2,371 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்காவில் 282 பேரும் ஜித்தாவில் 279 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் இன்று ஒரு நாளில் மட்டும் 2,122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குண்டமடைந்துள்ளனர் என்றும் இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 91,662 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.