குவைத்: இந்தியாவிற்கு 10 தனி விமானம் இயக்கும் பேக்கர் குரூப்..!! தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மற்றும் விபரங்கள் உள்ளே..!!
குவைத் நாட்டில் இருக்கக்கூடிய பேக்கர் குரூப் (Baker Group) நிறுவனத்தின் அல் தாயர் ட்ராவல்ஸ் (Al Tayer Travels), லக்ஸரி ட்ராவல்ஸ் (Luxury Travels) நிறுவனத்துடன் இணைந்து குவைத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்காக அந்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு பத்து சிறப்பு தனி விமானங்களை (Charter Flights) இயக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனமானது ஏற்கெனவே குவைத் நாட்டிற்கு சொந்தமான குவைத் ஏர்வேஸ் விமான நிறுவனத்திடம், இந்தியாவில் இருக்கும் வெவ்வேறு பகுதிகளுக்கு சுமார் பத்து விமானங்களை இயக்குவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையை பொறுத்து இந்த விமான சேவைகள் அதிகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் பாஹத் அல் பேக்கர் கூறுகையில், “இந்தியாவிற்கும் எனக்குமான தொடர்பு மிக வலிமையானது மற்றும் வரலாறுடையது. எனது தாத்தா காலத்திலிருந்தே நாங்கள் இந்தியாவில் வியாபாரம் புரிந்து வருகின்றோம். கொரோனாவின் பாதிப்பை முன்னிட்டு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில், சுமார் 70,000 இந்தியர்கள் குவைத்திலிருக்கும் இந்திய தூதரகத்தில் தாயகம் திரும்புவதற்காக பதிவு செய்திருந்ததை அறிந்த பொழுது, அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதனை தொடர்ந்தே இந்த முயற்சியை எடுத்துள்ளோம். இந்த சிறப்பு விமான திட்டத்தில் நாங்கள் எந்த இலாபத்தையும் எதிர்பார்க்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், “இந்த விமான சேவைகளானது வரும் ஜூன் மாதம் 18 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை இயக்க திட்டமிட்டுள்ளோம். குவைத் ஏர்வேஸிடமிருந்து 10 விமானங்களை இயக்குவது சம்பந்தமாக தொடர்பு கொண்டுள்ளோம். மேலும், விமான பயணத்தின் போது பயணிகளின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது. இதனால் முக கவசம், முகத்திரை, சிறிய அளவிலான சானிடைசர் பாட்டில் போன்றவற்றை பயணிகளுக்கு இலவசமாக வழங்கவுள்ளோம்”.
“நாங்கள் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற செய்யும் வகையிலும் அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்ல ஏதுவாகவும், பெரிய அளவிலான போயிங் 777 விமானங்களை புக் செய்துள்ளோம். எந்த ஏர்போர்ட்களில் இந்த பெரியளவிலான விமானங்களை தரையிறக்க முடியாதோ அந்த விமானநிலையத்தில் ஏர்பஸ் 320 வகையை சார்ந்த விமானங்களை குவைத் ஏர்வேஸிடமிருந்து பெற்று அதற்கான ஏற்பாடு செய்வோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஅதனுடன், இந்தியர்களை தாயகத்தில் இறக்கியபின் குவைத் நாட்டிற்கு திரும்பி வரும் விமானங்களில் சுகாதார ஊழியர்களை அழைத்து வர விரும்பினால் தங்களுக்கு தெரிவிக்குமாறு குவைத் நாட்டின் சுகாதார அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு செல்ல விரும்புபவர்கள் கட்டாயம் இந்திய தூதரகத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், வயது முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், வேலையிழந்தவர்கள் மற்றும் படிப்பு மற்றும் தேர்வுக்காக இந்தியா செல்ல விரும்புபவர்கள் போன்றவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்திலிருந்து செல்லும் விமானங்களானது இந்தியாவிலுள்ள சென்னை, கொச்சி, அகமதாபாத், ஹைதெராபாத், டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. விமானங்களை இயக்குவதற்கு குவைத் அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றுவிட்டதாகவும், இந்தியாவில் சென்று விமானத்தை தரையிறக்குவதற்கு இந்திய தூதரகத்தின் மூலம் அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என விதிமுறைகளில் இருப்பதால், இந்தியாவிற்கு செல்ல விரும்பும் பயணிகளின் விபரங்களை சேகரித்து இந்திய தூதரகத்தில் சமரிப்பித்ததன் பின்னரே MEA / DGCA / மற்றும் குறிப்பிட்ட மாநிலங்களிடமிருந்த்து ஒப்புதல் கிடைக்கும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு முறை தூதரகத்தில் பயணிகளின் விபரங்களை சமர்ப்பித்த பின்னர் ஒப்புதல் பெறுவதற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும் என்றும் கூறப்படுகின்றது.
குறைந்தது 300 பயணிகள் இருந்தால்தான் குறிப்பிட்ட பகுதிக்கு விமான சேவைகள் இயக்க முடியும் என்றும் பயணிகளின் எண்ணிக்கை 300 பேராக இருந்தால் மட்டுமே இந்திய தூதரகத்திடம் ஒப்புதல் பெறுவதற்காக கேட்டுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒருவேளை ஒப்புதல் கிடைக்காவிட்டால் மூன்று நாட்களில் முன்பதிவிற்காக வழங்கிய டிக்கெட் பணம் திருப்பி தரப்படும் என்றும் பேக்கர் குரூப் நிறுவனம் சார்பாக கூறப்பட்டுள்ளது.
பயணம் மேற்கொள்ளும் பெரியவர்கள் அதிகபட்சமாக 60 கிலோ எடை வரையிலும் லக்கேஜ் கொண்டு செல்லலாம் எனவும், ஹாண்ட் லக்கேஜ்ஜாக 7 கிலோ எடை வரையிலும் கொண்டு செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 கிலோ லக்கேஜ்ஜை இருபது இருபது கிலோ என மூன்று பிரிவுகளாக கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளுக்கு விமான பயண கட்டணம் இலவசம் என்றும் அவர்களுக்கு 10 கிலோ வரையிலும் லக்கேஜ் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குவைத்திலிருந்து தாயகம் செல்ல பயணிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மற்றும் முகவரி…
சால்மியா :
ஜிதின் ராஜ் – 96616568
லிணட் – 99691151
வசீம் – 99696767
பிலால் – 99557046
யூசுப் – 67774319
ஹவல்லி :
யாசர் – 67041981, 99694454
அதுல் – 97313355
அலுவலக முகவரி :
Winners International Trading Co WLL,
P.O.Box 5972 Safat 13060.
Tel.22213689, 24725554
Office No: 2, 1st Floor, Hawalli – Ritaj Complex
Bin Khaldoun Street.
குறிப்பு : பயணம் மேற்கொள்ள விரும்புபவர் விமான டிக்கெட்டிற்கு பணம் செலுத்துவதற்கு முன்பு பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் சரிபார்த்துக்கொள்வது நல்லது.