கத்தார் : தொழிலாளர்களுக்கான மதிய இடைவேளை விதியை மீறிய 56 நிறுவனங்கள்..!! கத்தார் அரசு நடவடிக்கை..!!
வளைகுடா நாடுகளில் ஒவ்வொரு வருடமும் அதிகளவு வெப்பநிலை உள்ள கோடைகாலங்களில் அந்நாடுகளில் திறந்த வெளிகள் மற்றும் நேரடியாக சூரியனுக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாளின் அதிகளவு வெயிலாக இருக்கும் மதிய நேரங்களில் கூடுதல் இடைவேளை கொடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். தற்பொழுது கோடைகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது.
அதே போல், அனைத்து வளைகுடா நாடுகளும் நேரடியாக சூரியனுக்கு கீழாக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மதியம், குறிப்பிட்ட நேரங்களில் இடைவேளை அறிவித்துள்ளன. இந்நிலையில், கத்தார் நாட்டில் இருக்கும் தொழிலாளர் ஆய்வுத் துறையால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் (Ministry of Administrative Development, Labour and Social Affairs – MADLSA), கடந்த ஜூன் 15 முதல் 18 வரை இது தொடர்பான விரிவான ஆய்வு பிரச்சாரங்களை மேற்கொண்டது.
இவ்வாறு ஆய்வு மேற்கொண்ட போது, அந்நாட்டில் இருக்கும் 56 நிறுவனங்கள் விதிகளுக்கு புறம்பாக அந்நாட்டில் அறிவிக்கப்பட்டிருந்த மதிய இடைவேளை நேரங்களில் தொழிலாளர்களை பணிபுரிய வைத்ததற்காக 3 நாட்களுக்கு அந்நிறுவனங்களின் வேலைத்தளங்களை (worksites) மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளன.
ஒப்பந்தத் துறையில் பணிபுரியும் விதிமீறலுக்கு உட்பட்டிருந்த பெரும்பாலான நிறுவனங்கள் அல் சைலியா, அல் ஹிலால், அல் வக்ரா, ராவதத் அல் ஹமாமா, அல் கரைதியத், அல் கராஃபா, உம் ஸ்னீம், லுசைல், அல் கெய்சா, அல் கோர், இஸ்காவா, அய்ன் கலீத், ஃபெரீஜ் அல் முர்ரா, உனைசா, அல் துமாமா, முயிதர், ஃப்ரிஜ் அல் மனாசீர் போன்ற பகுதிகளை சேர்ந்த நிறுவனங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தாரில் இருக்கக்கூடிய பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் கோடைகாலத்தில் சூரியனின் கீழ் அல்லது திறந்த பணியிடங்களில் செய்யப்படும் வேலைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ள மதிய இடைவேளை நேரங்களில் கடைபிடிக்க வேண்டாம் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அந்நாட்டின் 2007 ஆம் ஆண்டிற்கான அமைச்சகத்தின் முடிவு எண் 16 ன் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் சூரியன் அல்லது திறந்தவெளிகளில் செய்யப்படும் வேலைகளுக்கு காலை 11.30 மணி முதல் மாலை 3 மணி வரை தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மீறல்களைப் புகாரளிக்க, நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகம் (MADLSA) 40280660 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.