குவைத், ஓமானை தொடர்ந்து பஹ்ரைனிலும் வெளிநாட்டவர்கள் வேலை இழப்பு..!! அரசாங்க துறைகளில் குடிமக்களை பணியமர்த்த திட்டம்..!!
கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக எண்ணற்ற நாடுகளில் பல இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். குறிப்பாக, வளைகுடா நாடுகள் கொரோனாவின் தாக்கத்தினால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலையின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் பொருளாதார அளவில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன. இதனால் அங்கு பணிபுரிந்து வரும் எண்ணற்ற வெளிநாட்டவர்கள் தங்களின் வேலையை இழந்து தாய்நாட்டிற்கு திரும்பி செல்ல முடிவெடுத்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டிலும் கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார சரிவினால் அந்நாட்டின் பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்துவந்த ஏராளமான வெளிநாட்டு ஊழியர்களின் ஒப்பந்தங்களை பஹ்ரைன் அரசு முறித்துவிட்டதாகவும், மேலும் அடுத்த ஆறு மாதங்களில் கூடுதலாக பல வெளிநாட்டவர்களின் ஒப்பந்தங்கள் முறிக்கப்படும் என்றும் பஹ்ரைன் நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று (Al Watan) தெரிவித்துள்ளது.
பஹ்ரைன் நாட்டில் இருக்கும் மொத்த மக்கள்தொகையான 1.7 மில்லியனில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் பஹ்ரைன் நாட்டின் அரசாங்க வேலைகளில் வெளிநாட்டினருக்கு பதிலாக பஹ்ரைன் குடிமக்களை பணியில் அமர்த்துவதற்கான திட்டம் மேற்கொள்ள இருப்பதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து அந்நாட்டு குடிமக்களை பாதுகாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகளால், அந்நாட்டில் சுற்றுலாத்துறை மற்றும் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த துறைகளை ஆதரிக்கும் விதமாக சில திட்டங்களை தொடங்க பஹ்ரைன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் வழங்கிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அந்நாட்டில் ஏற்றுமதி 55 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் போக்குவரத்து ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் 98 சதவீதமும் ஹோட்டல்களில் தங்குமிடங்கள் 72 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனியார் துறை நிறுவனங்களை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வரும் பொருட்டு கடந்த மார்ச் மாதத்தில் 11 பில்லியன் டாலர் மதிப்பிலான ஊக்க திட்டங்களை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்நாட்டு குடிமக்களுக்கு தண்ணீர், மின்சாரம் மற்றும் நகராட்சி தொடர்பான சேவைகள் போன்றவற்றில் சலுகைகளை வழங்கியிருந்தது. மேலும், அந்நாட்டின் தனியார் துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பஹ்ரைன் நாட்டு குடிமக்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் என மூன்று மாதங்களுக்கும் அந்நாட்டு அரசாங்கமே சம்பளம் வழங்கும் எனவும் அறிவித்திருந்தது. இதன் காரணமாக, அந்நாட்டில் இருக்கும் 11,000 தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 90,000 பஹ்ரைன் நாட்டு குடிமக்கள் பயனடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.